ஊவா மாகாண சபையின் அரச உத்தியோகத்தர்கள், தமது ஒரு நாள் சம்பளத்தை அந்த மாகாணத்தின் மீள் கட்டமைப்புப் பணிகளுக்கான நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மாகாணத்திலுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களும் இதற்குத் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாக ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதுதொடர்பாக விருப்பத்தைத் தெரிவிப்பதற்கான சுற்றறிக்கையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டித்வா சூறாவளி
நாட்டில் நிலவிய ‘டித்வா’ சூறாவளியினால் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது.
இதேவேளை வீடுகளை இழந்த மக்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்குடன், தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (03.12.2025) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
டிட்வா சூறாவளியின் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ‘Rebuilding Sri Lanka’ நிதியம் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
