மித்தெனியவில் போதைப்பொருள் கடத்தல்காரரான கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு
பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட வழக்கு மற்றும் மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக
போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு
இரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான வழக்குகள் நேற்று (17)
வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவில் தடுப்பு காவலில் உள்ள பெக்கோ சமன் மற்றும்
தெம்பிலி லஹிரு ஆகியோரும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தனர்,
இதன் காரணமாக, நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டிருந்தது.
போதைப்பொருள் மீட்கப்பட்ட வழக்குடன்
இந்தநிலையில் நீதிமன்றத்துக்கு வந்த சட்டத்தரணிகள் உட்பட அனைவரும் கடுமையான
சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது, குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபரான
சம்பத் மனம்பேரிக்காக முன்னிலையான சட்டத்தரணி ஒருவரிடமிருந்து ஒரு
துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த துப்பாக்கி சட்டத்தரணியின் காரில் இருந்து மீட்கப்பட்டதுடன் மேலும் ஒரு
பிஸ்டல் வகை துப்பாக்கி, 15 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட ஒரு மெகசின் மற்றும் 5
கூடுதல் தோட்டாக்கள் நீதிமன்ற வாயிலை சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளால்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விசாரணையின் போது, துப்பாக்கி சட்ட பூர்வமாக சட்டத்தரணிக்கு வழங்கப்பட்டமை
தெரியவந்தது.
இருப்பினும், நீதிமன்ற பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள்
இது குறித்து வலஸ்முல்ல பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தகவல் அளித்ததை அடுத்து,
வழக்கு முடியும் வரை துப்பாக்கியை நீதிமன்ற காவலில் வைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
