‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தினால் மூடப்பட்டுள்ள நுவரெலியாவில் உள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஹக்கல தாவரவியல் பூங்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்வதற்காக விஜயம் செய்திருந்த போதே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
புனரமைப்பு நடவடிக்கைகள்
ஹக்கல தாவரவியல் பூங்கா மற்றும் அதற்கு முன்னால் உள்ள நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, ஹக்கல தாவரவியல் பூங்காவை உடனடியாக திறப்பது மற்றும் நிலத்தை உறுதிப்படுத்த குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழுவுடன் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கவும், சில நாட்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஹக்கல தாவரவியல் பூங்காவைத் திறக்க நடவடிக்கை எடுக்கவும் பிரதியமைச்சர் அதிகாரிகளுக்கு திட்டங்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
