ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார்(Yahya Sinwar) படுகொலை செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தமது புதிய தலைவர் தொடர்பான விடயத்தை இரகசியமாக வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அடுத்த வருடம் மார்ச் மாதம் புதிய தலைவரை தெரிவு செய்ய உள்ளதாகவும் அதுவரை அமைப்பு ஐந்து பேர் கொண்ட குழுவால் வழி நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐந்து பேர் கொண்ட குழு
இதன்படி கலீல் அல்-ஹய்யா, கலீத் மெஷால், ஜாஹர் ஜபரின், ஷூரா கவுன்சிலின் தலைவரான முஹம்மது தர்விஷ் மற்றும் ஐந்தாவது நபர் ஆகியோரைக் கொண்ட குழுவால் அமைப்பு வழிநடத்தப்படும்.
கலீல் அல்-ஹய்யா பெரும்பாலான அரசியல் மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார், மேலும் காசா தொடர்பான விlயங்களை அவர் நேரடியாகக் கவனிப்பார் என்று அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார். அதன் பலனாக இயக்கத்தின் செயல் தலைவராக திறம்பட செயல்பட்டு வருகிறார்.
ஆச்சரியத்தில் ஆழ்த்திய சின்வாரின் படுகொலை
கடந்த வாரம் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட விதம் தம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும் ஏனெனில் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் அவர் மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலில் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் தொடர்பாக தெரிவித்த குறித்த அதிகாரி, அவர்கள் தொடர்பான விவரங்களை வழங்குவதைத் தவிர்த்த போதிலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் மற்றும் பணியாளர்கள் ஆகிய இரண்டையும் இயக்கம் கொண்டுள்ளது என்று வலியுறுத்தினார்.
பணயக் கைதிகள் விடுதலை
பணயக் கைதிகளை விடுப்பது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் முதல் குறைந்தபட்ச பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர், கலீல் அல்-ஹய்யாவை துருக்கி தலைநகர் அங்காராவில் வெள்ளிக்கிழமை சந்தித்து சின்வாரின் தியாகத்திற்கு இரங்கல் தெரிவித்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
மேலும் ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் ஒரு வாரம் அல்லது அமெரிக்காவின் தேர்தல்களுக்கு முன்னதாக நிகழலாம் என்று ஈரான் எதிர்பார்க்கிறது என்று கூறினார்.