இலங்கை போக்குவரத்துச் சபையின் ஹட்டன்(Hatton) டிப்போ ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் இருந்து ஹட்டனுக்குச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை பொதுமக்கள் கடுமையாக தாக்கிய சம்பவத்தின் எதிரொலியாக இந்த எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது.
வேலைநிறுத்த எச்சரிக்கை
கொழும்பை அண்மித்த வெல்லம்பிட்டிய, கொட்டிகாவத்தை பிரதேசத்தில் வீதி வழியாக ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றை மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியொன்று அதிவேகமாக முந்திச் செல்லத் தலைப்பட்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் பக்கவாட்டில் சறுக்கியதன் காரணமாக அதன் பின்னால் உட்கார்ந்திருந்த பெண் வீதியில் வீசியெறியப்பட்டு வீழ்ந்துள்ளதுடன், பின்னால் வந்த ஹட்டன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவ்விடத்தில் திரண்ட பொதுமக்கள் பேருந்து சாரதி மற்றும் நடத்துனரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் வெல்லம்பிட்டி பொலிஸார் அவ்விடத்துக்கு வருகை தந்து பேருந்து சாரதி மற்றும் நடத்துனரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் டிப்போ ஊழியர்கள்
எனினும் கடுமையான காயங்களுடன் இருந்த சாரதிக்கு போதுமான சிகிச்சை பெற்றுக் கொடுக்க அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய பொதுமக்களை கைது செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இல்லாதபோது வேலைநிறுத்தப் போராட்டம் உள்ளிட்ட தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஹட்டன் டிப்போ ஊழியர்கள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.