முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள ‘வோல்வர்ஹாம்டன்’ என்ற தனியார் பல்கலைக்கழகத்தில் மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஒன்றரை நாட்களுக்குள் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் அரசு பணத்தை வீணடித்து அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அவர்களின் உத்தரவின் பேரில், கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
அத்துடன், அது தொடர்பான வழக்கு ஓகஸ்ட் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதித் தரப்பினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதியை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதனிடையே ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையான இரவு நீதிமன்ற அறையில் நடந்த நிகழ்வுகளை காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய நபர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு சிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
