சீரற்ற கால நிலையை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை தொடர்ந்து
பெய்து வருகிறது இதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் 8
பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த 210 பேர் வீட்டை விட்டு
வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் 26 வீடுகள் பகுதியளவில்
சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 21ம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பித்த மழை தொடர்ந்து
பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டதிலுள்ள குளங்கள் நிரம்பி வருவதுடன்
தாழ் நிலப் பிரதேசங்கள், வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன்
காற்றினால் பல பிரதேசங்களில் வீதிக்கு குறுக்கே மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
இவற்றை அந்தந்த பிரதேச பிரதேச சபையினர் வெட்டி அகற்றி வருகின்றனர்.
போக்குவரத்து துண்டிப்பு
இதேவேளை இந்த அடைமழையை அடுத்து கிரான் தாம்போதிக்கு மேலால் வெள்ள நீர் பாய்ந்து
ஓடுவதால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல்லுக்கும் இடையே உள்ள போக்குவரத்து
துண்டிக்கப்பட்டுள்ளது
அதேவேளை மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பாலம் மற்றும் மட்டக்களப்பு
சுமைதாங்கி தாம்போதிகளின் மேலால் வெள்ள நீர் பாய்ந் தோடுவதால் மட்டக்களப்பு
நகருக்கும் வவுணதீவுக்கும் இடையேயும் புதூருக்கும் மட்டக்களப்பு நகருக்கும்
இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை செயலிழப்பு
இவ்வாறு வெல்லாவெளி தாம்போதியினால் வெள்ளநீர் பாய்ந்தோடுவதால்
வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையடுத்து
அந்த பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அடை மழையால் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. வீதி போக்குவரத்துக்கள் குறைவடைந்து மக்களின் இயல்பு
வாழ்க்கை செயலிழந்துள்ளது. தொடர்ந்து காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
