Home இலங்கை சமூகம் மலையகத்தில் கனமழை : போக்குவரத்து ஸ்தம்பிதம்… விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மலையகத்தில் கனமழை : போக்குவரத்து ஸ்தம்பிதம்… விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

மத்திய மலைநாட்டு பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் மக்களின்
இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (27) அதிகாலை ஹட்டன் செனன் பகுதியில் பிரதான வீதியில் பல மரங்கள்
முறிந்து விழுந்ததால், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து
பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதியில் விழுந்த மரங்களை ஹட்டன் காவல்துறை அதிகாரிகளும், பிரதேச மக்களும் இணைந்து வெட்டி அகற்றிய நிலையிலும் இந்த
வீதியினூடான போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

இதனையடுத்து, ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள டிக்கோயா பகுதியில் பல
பெரிய மரங்கள் பிரதான வீதியில் முறிந்து விழுந்துள்ளதோடு, வீதியோரங்களில்
அமைந்துள்ள பல மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

ஹட்டன் வனராஜா தோட்டப்பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில்,
மூன்று வீடுகளின் கூரைகள் மற்றும் சமையலறை சுவர்கள் என்பன சேதமடைந்துள்ளன.

தற்போது வீசும் பலத்த காற்று காரணமாக, மரங்கள் மற்றும் மரக்கிளைகள் உயர்
மின்னழுத்த மின் கம்பிகளில் விழுந்துள்ளதன் விளைவாக ஹட்டன், நோர்வூட்,
கொட்டகலை மற்றும் நோட்டன்பிரிடஜ் ஆகிய பகுதிகளில் முழுமையான மின்சாரம்
துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தடை

மின் தடை ஏற்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும் என்று ஹட்டன் மின்சார வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.

இதேவேளை நுவரெலியாவில் (Nuwara Eliya) பெய்த கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பெரியளவிலான
சைப்ரஸ் மரங்கள் முறிந்து விழுந்ததால், இன்று அதிகாலை நுவரெலியா – பதுளை பிரதான
வீதியின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாக நுவரெலியா காவல்துறையினர்
தெரிவித்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வீதிகள்
மற்றும் சிறிய வீதிகளில் வாகனம் செலுத்தும் போது எச்சரிக்கையுடன் வாகனங்களை
ஓட்டுமாறு காவல்துறையினர் சாரதிகளுக்கு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version