லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை – டில்கூல்றி தோட்டத்தில் ஆபத்தான
மரங்களை அகற்ற அனுமதியளித்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அசமந்த போக்கில்
இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த தோட்டத்தில் மூன்றாம் இலக்க தொடர் குடியிருப்புக்கு அருகில் ஆபத்தான
ஐந்து பாரிய மரங்கள் காணப்படுகின்றன.
எனவே அப்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் மரம் உள்ள
பகுதியில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. சில மரங்களில் வேர் பிடிமானம் இன்றி வெளியே
தெரிகின்றன.
மக்களின் கோரிக்கை
இந்த மரங்கள் சிறிய காற்றுக்கும் விழக்கூடிய அபாயத்தில் காணப்படுவதாகவும் இதனால் வீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் தொடர்
குடியிருப்பு ஆகியன பாதிப்படைந்து உயிராபத்து ஏற்படாலாம் எனவும் தோட்ட நிர்வாகத்திற்கும் கிராம சேவகர் மற்றும் பிரதேச
செயலகம் உள்ளிட்ட அனைத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அவர்கள் ஆபத்தான
ஐந்து மரங்களை வெட்டியகற்றுவதற்கு அனுமதி வழங்கியிருப்பதாகவும் ஆனால் மரங்களை
வெட்டுவதற்கு ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டுவதாகவும் இதனால் 30 குடும்பங்களைச்
சேர்ந்த உயிர்கள் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியினை ஊடகங்களில் நேற்றும் இன்றும் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து
இன்று 19ஆம் திகதி தோட்ட நிர்வாகத்தினால் குறித்த மரத்தினை
வெட்டியகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் சுட்டிக்காட்டும் போதே உடன் நடவடிக்கை எடுப்பதன் மூலம்
ஏற்படவிருக்கும் பல ஆபத்துக்களை தவிர்த்து கொள்ள முடிவதோடு அதனால் பல வீணான
இழப்புக்களையும் சிரமங்களையும் தவிர்தது கொள்ளலாம் என பலரும் தெரிவித்துள்ளனர்.
