வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பேராறு நீர்த்தேக்கத்தின்
இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளன.
நேற்று (24.11.2024) முதல் பெய்துவரும் கனமழை காரணமாக வவுனியாவில் பல குளங்கள்
நிறைந்துள்ளன.
அந்தவகையில், பேராறு நீர்ததேக்கத்திற்கு நீர்வரத்து
அதிகரித்துள்ளமையினாலேயே வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்
இதனால் இதற்கு கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒமந்தை, பாலமோட்டையில் அமைந்துள்ள மடத்துவிளாங்குளம் அணைக்கட்டில்
உடைப்பெடுத்தமையால் இக்குளத்தின் கீழ் உள்ள 82.84 ஏக்கர் நிலம் நீரால்
சூழப்பட்டுள்ளதுடன், இப்பகுதியின் ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
மேலும் இதனை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கையினை கமக்கார அமைப்பு மற்றும் கமநல
அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ். இளைஞர்களின் முன்னுதாரணமான செயற்பாடு
இதேவேளை, யாழ்ப்பாணம் (Jaffna) – தென்மராட்சி வரணி நாவற்காடு கரம்பைக்குறிச்சி பகுதி மக்கள்
மற்றும் விவசாயிகள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற பிரதான வீதியில் தாழ் நிலப்பகுதி ஒன்றில் மழை காலங்களில் அதிகளவான வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணத்தால்
குறித்த வீதியினூடாக போக்குவரத்து செய்யும் அப்பிரதேச மக்கள் மற்றும்
விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இந்நிலையில் நாவற்காடு, கரம்பைக்குறிச்சி இளைஞர்கள் அதிரடி முயற்ச்சியாக தமது
நிதிப்பங்களிப்புடன் குறித்த வீதியினூடாக மக்கள் சிரமப்படாது செல்லும் வகையில்
சீர் செய்துள்ளனர்.
இந்த வீதிக்கான சீர் செய்யும் வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்துக்கான
செலவை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சி.பிரபாகரன் பொறுப்பேற்றுள்ளார்.
இவ்வாறான செயற்பாடு அனைவருக்கும் முன்னுதாரணமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் – கஜிந்தன்