Home இலங்கை சமூகம் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு : முன்னாள் போராளி விடுத்துள்ள அழைப்பு

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு : முன்னாள் போராளி விடுத்துள்ள அழைப்பு

0

இலங்கையில் உள்ள நான்கு இனத்தைச் சேர்ந்த போராளிகளும் மாவீரர் ஆகியுள்ளனர்.
எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்தே இறுதி யுத்தம் வரை உறுதியுடன்
போராடியுள்ளனர். இந்த மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே.
வருடாவருடம் இந்த விடயம் தொடர்பாக நான் வலியுறுத்தி வருகிறேன் என முன்னாள் போராளியும் மாவீரர் அறிவிழியின் தந்தையுமான முத்துக்குமார் மனோகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யாழ்.ஊடகமையத்தில் இன்று அவர் நடத்திய ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளதாவது,

எனது அன்புக்குரிய புலம்பெயர் உறவுகளே!

கனகபுரம் துயிலுமில்லத்தில் புறந்தள்ளப்பட்ட எனது வேண்டுகோள்

தாயகத்தைப் பிரிந்து வாழ நேர்ந்தாலும் எப்போதும் அதன் விடிவிற்காகவும்,
மாவீரர் நினைவுகளைக் கௌரவிக்கவும் தாங்கள் ஆற்றிவரும் பணிகளை உணரமுடிகிறது.
அதற்காக தாயக மக்கள் சார்பில் மனப்பூர்வமாக நன்றி அறிதலைத்
தெரிவித்துக்கொள்கிறேன் மாவீரர் அறிவிழியின் தந்தையான முத்துக்குமார் மனோகர்
ஆகிய நான்.

இலங்கையில் உள்ள நான்கு இனத்தைச் சேர்ந்த போராளிகளும் மாவீரர் ஆகியுள்ளனர்.
எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்தே இறுதி யுத்தம் வரை உறுதியுடன்
போராடியுள்ளனர். இந்த மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே.வருடாவருடம் இந்த விடயம் தொடர்பாக நான் வலியுறுத்தி வருகிறேன்.

குறிப்பாக
2022ஆம் ஆண்டு மாவீரர் நாளில் கனகபுரம் துயிலுமில்லத்தில் எழுத்து மூலமாக நான்
விடுத்த வேண்டுகோள் புறந்தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மூன்று மாவீரர்களின்
அன்னையான சிங்களப் பெண்மணி துயிலுமில்ல வாசலில் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி
அனுப்பப்பட்டமை ஒரு மாவீரரின் தந்தை என்ற வகையில் தாங்கொணாத் துயரத்தை
ஏற்படுத்தியது.

 வேழமாலிகிதனின் பதிலால் ஆச்சரியம்

‘நான்கு இனத்தவர்களின் ஈகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம்’ என்ற
தலைப்பில் கடந்த 23ஆம் திகதி உதயன் சஞ்சீவியில் வெளிவந்த நான் எழுதிய
கட்டுரையின் பிரதிகளை கிளிநொச்சி ஜெயந்தி நகரில் நடைபெற்ற நிகழ்வில்
கலந்துகொண்ட மாவீரர்களின் பெற்றோர், உறவினர்களிடம் வழங்கினேன். எனது
எதிர்பார்ப்பின் நியாயத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

எனவே கடந்த ஆறு
வருடங்களாக நான் விடுத்த அதே வேண்டுகோளை நேற்று (24.11.2025) கரைச்சி பிரதேச
சபையின் தவிசாளர் வேழமாலிகிதனிடம் அவரது பணிமனையில் நினைவுபடுத்தினேன்.
அத்துடன் சிங்கள-முஸ்லிம் மாவீரர்கள் நினைவாக உங்களது நிலைப்பாடு என்ன என்று
கேட்டேன். ஏனெனில் இவர் 2022ஆம் ஆண்டு மாவீரர் நாள் காலப்பகுதியில் அடுத்த
ஆண்டு கட்டாயம் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வீரவேங்கை ரமீஸின் பெற்றோர்
கௌரவிக்கப்படுவார்கள் என உறுதிமொழி வழங்கியவர்.

தற்போது அவரது பதில் எனக்கு
ஆச்சரியமளித்தது.
‘புலம்பெயர் உறவுகள் சிங்கள-முஸ்லிம் மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிப்பது
குறித்து கடும் சினத்துடன் ஆட்சேபிக்கிறார்கள்’ என்பதே இப்பதில். தவறான
புரிதல் இது. மக்கள் பிரதிநிதி அதுவும் உள்ளூராட்சிச் சபையின் தவிசாளர் எமது
மாவீரர்களின் பெற்றோரின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியவர் இப்படிப் பதில்
சொல்வதை நீங்களும் ஏற்கமாட்டீர்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

கட்சித்தலைவரின் நியாயப்பாடு

இவரது பதிலைத் தொடர்ந்து உடனடியாக யாழ்ப்பாணம் விரைந்த நான் கட்சித் தலைவர்
சி.வி.கே. சிவஞானத்தைச் சந்தித்து விடயத்தைச் சொன்னேன். ‘எமது போராட்டத்தின்
நியாயத்தன்மையை உணர்ந்துகொண்டு விடுதலைப்போரில் ஆகுதியானோரின் பெற்றோர்
நிச்சயம் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்களே’ என அவர் பதிலளித்தமை ஆறுதலாக
இருந்தது.நடந்த விடயங்களைக் கேட்டு மனம் வருந்திய அவர் இந்தக் கௌரவிப்புகள்
ஏற்கனவே நடத்திருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இந்தப் போராட்டத்தில் ஏதோ முடிந்தளவு என்னால் பங்காற்றியுள்ளேன். இன்று நான்
உயிரோடு இருப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஆற்றிய பங்களிப்பை நான் எப்போதும்
நன்றியுடன் நினைவு கூருவேன்.

மாவீரர் பெற்றோரை புறந்தள்ளுவதைத் தேசியத்
தலைவரின் ஆன்மாவும் மன்னிக்காது.
எனவே புலம்பெயர்ந்து வாழும் தாங்கள் அனைவரும் தேசியத் தலைவரின் தலைமையை
ஏற்றுப் போராடிய சிங்கள-முஸ்லிம்-பறங்கி என மாவீரர்களின் பெற்றோர்
புறந்தள்ளப்படுவது குறித்த ஆட்சேபனைகளையும், எதிர்காலத்தில் எவ்வாறு
நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையையும் கரைச்சி பிரதேசசபைத் தலைவருக்கும்
அவரை வழிநடத்தும் மாவட்டத் தலைமைக்கும் உடனடியாக சாத்தியமான சகல வழிகளிலும்
தெரிவியுங்கள் நன்றி மறந்த இனத்தவராக நாம் மாறக்கூடாது.

கைதிகள் பரிமாற்றம்
மூலம் இரு போராளிகளை விடுவிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தபோது அவர்களில்
ஒருவராக காமினி என்ற சிங்களப் போராளியைக் கிட்டு குறிப்பிட்டார். விடுதலையாகி
வந்த அந்தப் போராளி மட்டக்களப்பில் போராடி 04.05.1987 வந்தாறுமூலையில்
வீரச்சாவடைந்தார். இறுதி யுத்தம் வரை முஸ்லிம் போராளிகள் போராடினர்.
இவையெல்லாம் சாமானியமான விடயங்களா?

நிதி வேண்டுமாயின் நான் உண்டியல் குலுக்கி வழங்கத் தயார் 

உங்களுக்கு மாவீரர் நாளுக்கு நிதி
வேண்டுமாயின் நான் உண்டியல் குலுக்கி வழங்கத் தயார் என வேழமாலிகிதனுக்குத்
தெரிவித்ததையும் சுட்டிக்காட்டுகிறேன்.

இன்னொரு விடயம் மாவீரர் நினைவேந்தல் மற்றும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்புகளை
தமது அரசியல் எதிரிகளைச் சாடும் களங்களாக மாற்றவேண்டாமென தயவுசெய்து
சம்பந்தப்பட்டவர்களுக்குச் சுட்டிக்காட்டுங்கள்.

இன உறவுகளை மேம்படுத்துவதில்
ஆர்வமுள்ள ஒரு முஸ்லிம் குழுவினர் ஏதாவதொரு மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு
முஸ்லிம் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கவேண்டும். இதற்கான முழுச் செலவையும்
தாங்கள் பொறுப்பேற்கிறோம் என எனக்குத் தெரிந்த ஒரு தரப்பு மூலம் வேண்டுகோள்
விடுத்தனர்.

அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் தலைமை

இந்தவேண்டுகோள் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் தலைமைக்கு அதன்
மத்திய குழு உறுப்பினர் மூலம் தெரியப்படுத்தியும் அந்தப் பேச்சைத் தொடர
அவர்கள் விரும்பவில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தினர்.

எனவே, தேசியத்தலைமையை நேசிக்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது உறவுகள்
முன்னாள் போராளிகள் இந்த விடயத்தில் தங்களது முடிவை உடனடியாகக்
கிளிநொச்சிக்கும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் தெரிவிக்குமாறு பணிவன்புடன்
வேண்டுகின்றேன்.    

NO COMMENTS

Exit mobile version