சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கானது மூதூர் நீதிமன்ற
நீதிவான் தஸ்னீம் பௌஸான் முன்னிலையில் நேற்று(26) எடுத்து
கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி நடைபெற்ற நீதிமன்ற மாநாட்டின் படி ,
குறித்த இடத்தில் மேலும் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்காக
தொல்பொருள் திணைக்களத்திடமுள்ள ஸ்கேன் இயந்திரம் மூலம் மேலும் ஆராய்வதற்கான
உத்தேச பட்ஜெட்டானது நேற்று மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் சம்பூர் பொலிஸாரினால் சமர்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் அனுமதியுடன்
இவ் உத்தேச பட்ஜெட்டானது மூதூர் நீதிமன்றத்தின் கட்டளையுடன் மாகாண மேல்
நீதிமன்றத்துக்கு அனுப்பப்படவுள்ளதுடன் மாகாண நீதிமன்றத்தின் அனுமதியுடன்
மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்தோடு குறித்த வழக்கானது மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் 2
ஆம் திகதி மீள அழைக்கப்படவுள்ளது.
சம்பூர் கடற்கரைப் பகுதியில் மிதிவெடி அகற்றுப் பணி இடம்பெற்று வந்த நிலையில்
ஜுன் மாதம் 20 ஆம் திகதி சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து மிதிவெடி அகற்றும் பணிகள் மூதூர் நீதிமன்ற அனுமதியுடன்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
