Home இலங்கை சமூகம் வீதியைப் புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் உண்ணாவிரத போராட்டம்

வீதியைப் புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் உண்ணாவிரத போராட்டம்

0

யாழ்ப்பாணம் (Jaffna), பருத்தித்துறை – பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உண்ணாவிரத போராட்டம் வல்வெட்டித்துறையில் இன்று (22) ஆரம்பமாகியுள்ளது.

யுத்தத்திற்கு பின்னர் 30 வருடங்களுக்கு மேலாக வல்வெட்டித்துறையிலிருந்து
தொண்டைமானாறு வரையான 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த
போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பொதுமக்களின் ஆதரவு 

குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்றனர்.

இதன்போது “எமது வீதி எமக்கானது“, “புதிய அரசே புது வீதி அமைத்து தா”, ”ஓட்டுக்காக
வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த வீதி புனரமைக்கப்படாமைக்கு பல காரணங்கள் உள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கடந்த அரசாங்கத்திடம் இது தொடர்பாக நாம் பல கோரிக்கைகளை முன்வைத்த போதிலும்
எவ்வித மாற்றமும் நிகழவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதேச மக்கள் விசனம் 

இப்பகுதியில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வீடு இருப்பதாலும்
இங்குள்ள மக்கள் சுற்றுலா துறையிலே முன்னேற்றம் அடைவதற்கும் கடற்றொழில்
சார்ந்த மக்கள் தமது தொழிலை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் தடை ஏற்படுத்தும்
வகையிலே குறித்த வீதி அமைக்காமல் புறக்கணிக்கப்படுவதாக பிரதேச மக்கள்
தெரிவிக்கின்றனர்.

எனவே புதிய அரசாங்கம் தற்போது பதவியேற்றிருக்கும் நிலையிலே எதிர்வரும்
பாதீட்டில் இந்த வீதிக்கான நிதியை ஒதுக்கி அதனை புனரமைப்பு செய்து தருமாறு
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/0QHQJgcrY1g

NO COMMENTS

Exit mobile version