மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சில இடங்களில் இடம்பெறும் கசிப்பு
மற்றும் போதைப்பொருள் விற்பனைகள் தொடர்பில் பொலிஸார் மற்றும் மதுவரித்திணைக்கள
அதிகாரிகள் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க பணிப்புரைகள்
விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக்குழு
கூட்டம் நேற்று (24) நடைபெற்றது.
இதன்போது, கடந்த ஆண்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவுகளில்
முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன்
பூர்த்தியடையாத வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கான பணிப்புரைகளும்
விடுக்கப்பட்டன.
முக்கிய திட்டங்கள்
இதேபோன்று 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி, உலக உணவு திட்டத்தின் முன்னெடுக்கப்படவுள்ள
திட்டங்கள், ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மூன்று
கிராமங்கள் தெரிவுசெய்ய்பட்டுள்ள நிலையில் அங்கு முன்னெடுக்கப்படவுள்ள
வேலைத்திட்டங்கள் என்பன குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன் தேசிய வீடமைப்பு அதிகாரசபை,மீள்குடியேற்ற அமைச்சு என்பனவற்றின் ஊடாக
முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டங்கள்,சமூக அபிவிருத்தி நிகழ்ச்சி
திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது
ஆராயப்பட்டு அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.
