திருகோணமலை – கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சேகரித்து
வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான மணல் இன்று(12) சூரியபுர பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச்
சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.
சூரியபுர பகுதியில் அமைந்துள்ள மகாவலி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணலை எடுத்து அதனை
இப்பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பொலிஸ் அத்தியட்சகர் திரு. எல்.எம். சஞ்சீவ பண்டார அவர்களின் நேரடி அறிவுறுத்தலின்
பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.
கடுமையான சட்ட நடவடிக்கை
சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட புவியியல் மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகள் மற்றும்
கந்தளாய் பிரதேச சபை அதிகாரிகள் இணைந்து, கைப்பற்றப்பட்ட மணலின் அளவை கணக்கெடுக்கும் பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள்
தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
