Home இலங்கை பொருளாதாரம் சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை

0

இலங்கையில் பொருளாதார அபாயங்கள் இன்னமும் பூரணமாக நீங்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) 7 ஆவது மீளாய்வு தொடர்பில் அதிகாரிகள் மட்ட உடன்பாட்டை எட்ட முடியாமல் போயுள்ளது.

இது தொடர்பில் இலங்கை விஜயத்தை நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

7 ஆவது மீளாய்வு

7 ஆவது மீளாய்வை நிறைவு செய்வதற்குத் தேவையான கொள்கைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பில் உடன்பாட்டை எட்டுவதற்காக, எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தைகள் மேலும் தொடரும் என தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து விரைவில் அதிகாரிகள் மட்ட உடன்பாட்டை எட்டுவதும், மீளாய்வை உரிய காலத்தில் நிறைவு செய்வதுமே நோக்கமாகும் எனவும்  இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவைத் தொடர்ந்து வழங்கவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

7 ஆவது மீளாய்வு குறித்த அதிகாரிகள் மட்ட உடன்பாட்டை எட்டுவதற்கு முன்னர், உடன்பட வேண்டிய சில விடயங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் இலங்கை விஜயம் செய்த பிரதிநிதிகள் குழுவின் தலைவர் எவன் பாப்பஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.

பொருளாதார அதிர்ச்சிகளுக்கு மத்தியில்

பேரினப்பொருள் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேண எச்சரிக்கையான கொள்கைகளும் சீர்திருத்தங்களுமே அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் கட்டத்திலிருந்து உருமாற்றக் கட்டத்திற்கு கொண்டு செல்லவும், வறுமையைக் குறைத்து அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை எட்டவும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களின் வேகத்தைத் தக்கவைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான பொருளாதார அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் இலங்கைப் பொருளாதாரம் மீள்தன்மையை வெளிப்படுத்தியுள்ள போதிலும், பொருளாதார அபாயங்கள் இன்னும் நீடிப்பதாக நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.      

Source: https://tamilwin.com/article/imf-warns-about-economy-1790209793

NO COMMENTS

Exit mobile version