வைத்தியரின் பரிந்துரையின்றி குழந்தைகளுக்கு பெரசிட்டமோல் கொடுக்க வேண்டாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் (National Hospital Colombo) நச்சு விவரங்கள் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு அதிக அளவிலான பெரசிட்டமோல் கொடுப்பதனால் அவர்களின் கல்லீரலுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தினை, சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர்களின் பரிந்துரை
அவர் மேலும் தெரிவிக்கையில், “வைத்தியர்களின் பரிந்துரைகளில் பெரசிட்டமோல் மருந்தைக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும் போது அதிக அளவு பெரசிட்டமோல் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலை மேலும் மோசமான நிலைக்குள்ளாகும்.
சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் கண்டறிந்தால் பெரசிட்டமோலை அதிக அளவில் கொடுக்கின்றனர்.
இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி திட்டமிடப்பட்ட அளவை வழங்க வேண்டும்.
இது தொடர்பாக மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள 0112 686 143 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.