மாகாண மட்ட சதுரங்க போட்டியில் தனிநபர் போட்டிகளை திடீர் என குழு போட்டிகளாக மாற்றி
தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து தமக்கு நீதியைப் பெற்றுத்தருமாறும் மட்டக்களப்பு மாவட்ட சதுரங்க வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாண சதுரங்க போட்டிகள் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில்
நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் கிழக்கு மாகாண
விளையாட்டு அமைச்சும் இணைந்து இந்த போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.
முறையான விசாரணைகள்
மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட தனிநபர் சதுரங்க போட்டியில்
தெரிவு செய்யப்பட்டவர்கள் இந்த மாகாண போட்டிக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும்
போட்டியின் இறுதி நாள் வரையில் தனிநபர் போட்டி என கூறவிட்டு இறுதி நாளன்று
குழு போட்டி என தெரிவித்ததன் காரணமாக தமது வீரர்கள் இந்த
சுற்றுப்போட்டியிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சதுரங்க
சிரேஸ்ட பயிற்றுவிப்பாளர் சௌத்திரி தெரிவித்தார்.
இதன்மூலம், மட்டக்களப்பு மாவட்ட சதுரங்க போட்டியாளர்களுக்கு பாரிய அநீதி
இழைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்கள
பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது விரும்பினால் விளையாடுங்கள் என்று
உதாசீனமாக பதில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தமக்கான
நீதியைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
