Home இலங்கை சமூகம் இறுதிநேர வருமான சமர்ப்பிப்பு : நெருக்கடிக்கு உள்ளான இறைவரித்திணைக்களம்

இறுதிநேர வருமான சமர்ப்பிப்பு : நெருக்கடிக்கு உள்ளான இறைவரித்திணைக்களம்

0

Courtesy: Sivaa Mayuri

2024 நவம்பர் 30 காலக்கெடுவிற்கு முன்னர் தங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய முயற்சித்தவர்களின் கடைசி நிமிட அவசரம் காரணமாக, உள்நாட்டு இறைவரித்திணைக்களம் ( Inland Revenue Department) நெருக்கடியை சந்தித்துள்ளது.

இணையத்தின் ஊடாக ஒரே நேரத்தில் 16,000 பேர் உள்நுழைந்தபோது இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டது.

குறைந்த ஆற்றல் கொண்ட கணினிகளின் மூலம் உள்நுழைந்தோர், ஒரே நேரத்தில் பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் சிரமப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய முறையை அணுக முடியாத நிலை

பல முறை முயற்சித்த பின்னர், தமது கணினிகள் செயலிழந்துவிட்டதாகவும் பலர் முறையிட்டுள்ளனர்.

எனினும், தாக்கல் செய்யும் செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதும், அவையும் வெற்றிபெறவில்லை என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சில பகுதிகளில் மின்சாரம் இல்லாததால், இணைய முறையை அணுக முடியாத நிலையில் பலர் சிரமங்களுக்கு உள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருமானக் கணக்கைத் தாக்கல் செய்வது கட்டாயமாக இணையம் மூலமாகவே செய்யப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரித்திணைக்களம் அறிவித்திருந்தது.

 போதுமான கால அவகாசம்

அதேநேரம் ஆணையாளரிடம் முறையீடு செய்வதன் மூலம் கைமுறையாக தாக்கல் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்திருந்தது.

முன்னதாக, அக்டோபர் 1 ஆம் திகதி முதல் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான அமைப்பு திறக்கப்பட்டுள்ளது,
இதன் மூலம் கணக்குகளை தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும், காலக்கெடுவிற்குப் பிறகு தங்கள் வருமானத்தை தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கணினி செயலிழப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தினால், ஆயிரக்கணக்கானோர் சரியான நேரத்தில் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய இயலாமை காரணமாக நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் இருந்து தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. 

NO COMMENTS

Exit mobile version