Courtesy: Sivaa Mayuri
புதிய இணைப்பு
இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய சுற்றுலா பயணியான பெண் திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், மூன்று நாட்களுக்கு பிறகு இன்று(29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம், உப்புவெளி பிரதேச சபை, சுற்றுலாப் பணியகம் ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய, குறித்த தரப்பினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு, மர்மமான முறையில் காணாமல் போன பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் இன்று(29) மீட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த சுற்றுலா பயணி மருத்துவ பரிசோதனையின் பின், அவருடைய நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கைக்கு வந்திருந்த வேளையில் கடந்த புதன்கிழமை (26) முதல் காணாமல் போயுள்ள 25 வயதுடைய இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியான தாமர் அமிதாயை ( Tamar Amitai) கண்டுபிடிக்க திருகோணமலை – உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி இலங்கைக்கு வந்த அமிதாயி, திருகோணமலை (Trincomalee) பகுதியில் தனியாக பயணம் செய்து கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார்.
விருந்தக உரிமையாளர்
அவர் இணையத்தில் விருந்தினர் மாளிகையை முன்பதிவு செய்து திருகோணமலையில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்தார்.
எனினும் வெளியில் சென்றவர், புதன்கிழமை (26) முதல் விடுதிக்கு திரும்பவில்லை என்றும் விருந்தக உரிமையாளர் கூறியுள்ளார்
இது குறித்து விருந்தக உரிமையாளர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
விசாரணைகள்
இதனையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அமிதாய் தனது உடமைகளை விருந்ததகத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்தநிலையில் அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் +972508899698 (WhatsApp) அல்லது sar@magnus.co.ilஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.