Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் தேர்தல் வேட்பாளர்களால் ஏற்படுத்தப்படும் நெருக்கடி

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் தேர்தல் வேட்பாளர்களால் ஏற்படுத்தப்படும் நெருக்கடி

0

Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவு (Mullaitivu) – மாங்குளம் வீதி (A34)யில் பொதுத் தேர்தல் – 2024இல் போட்டியிடும் வேட்பாளர்களின் செயற்பாடுகளால் சாரதிகள் நெருக்கடியை எதிர்கொள்ள நேர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீதியில் நீண்ட தூரத்திற்கு தங்கள் தேர்தல் கட்சி சின்னம் மற்றும் இலக்கத்தினை குறிப்பிட்டு புள்ளடி இடுவதனாலேயே இந்த நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

இருவழி பாதைகளாக உள்ள மாங்குளம் முல்லைத்தீவு வீதியின் வரும் மற்றும் போகும் வழித்தடங்கள் இரண்டிலுமே இந்த அசௌகரியச் சூழலினை ஏற்படுத்தியிருந்தது விசனத்தை ஏற்படுத்தும் விடயமாக சமூக ஆர்வலர்களால் நோக்கப்படுகிறது.

கோடாலிச் சின்னம்

கோடாலிச் சின்னத்தில் இலக்கம் 3 வேட்பாளரை குறித்து மேற்கொள்ளப்படும் பிரசார உத்தியாகவே இது அமைந்துள்ளது.

கருவேலன்கண்டலில் இருந்து ஒட்டுசுட்டான் சிவன் கோவில் சந்தி வரையுமான முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இவ்வாறு கோடாலிச்சின்னம் இலக்கம் 3 வேட்பாளர் பிரசாரப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

முல்லைத்தீவில் இருந்து மாங்குளம் போகும் வழித்தடத்தில் இந்த பிரசார குறியீடுகள் இடப்பட்டுள்ளதாக சாரதிகள் சிலரிடையே மேற்கொண்ட தேடலின் போதும் அறிய முடிகின்றது.

வெள்ளை நிற பூச்சுத் திரவத்தினால் கோடாலி சின்னம் அடுத்து இலக்கம் 3 அதனை அடுத்து புள்ளடி (×)க் குறியீடு என வீதிக்கு குறுக்கே வரையப்பட்டுள்ளது. பயணிப்போரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அது இருப்பதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

கருவேலன்கண்டலில் இருந்து ஒவ்வொரு நூறுமீற்றருக்கும் சற்று குறைவான தூர இடைவெளியில் ஒட்டுசுட்டான் சிவன் கோவில் சந்தி வரை தொடர்ந்து வரையப்பட்டுள்ளதை தான் அவதானித்ததாக ஒரு சாரதி குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

வீடும் விடவில்லை

கோடாலிச் சின்னத்தின் இலக்கம் 3 இல் போட்டியிடும் வேட்பாளருக்கான பிரசார உத்தி போலவே வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் இலக்கம் 3 வேட்பாளருக்கான பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்திற்கு முன்னுள்ள முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் வரையப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

பாடசாலைக்கு முன் ஆரம்பமாகும் இது பாடசாலையைக் கடந்து ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வரை தொடர்ந்து செல்வதையும் அவதானிக்கலாம்.

வீடு அதனையடுத்து இலக்கம் 3 அதனை அடுத்து புள்ளடி (×) என இங்கும் வீதிக்கு குறுக்காக வரையப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

இதுவும் குறிப்பிட்ட தூர இடைவெளியில் வெள்ளை நிற பூச்சுத் திரவத்தைக் கொண்டு வரையப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் முல்லைத்தீவு போகும் திசையின் வழித்தடத்தில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இலக்கம் 3 இதற்கான பிரசார குறியீடுகள் இடப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

எல்லா கட்சிகளும்

வீடு மற்றும் கோடாலி கட்சிகளின் போட்டி வேட்பாளர் இலக்கம் 3 இன் போட்டியாளர்கள் போல் இதே கட்சியின் ஏனைய போட்டி வேட்பாளர்களும் நடந்து கொண்டால் வீதியின் நிலை என்ன என்ற கேள்வியை கேட்டு வியக்கும் மக்களில் சிலரையும் சந்தித்து உரையாட முடிந்தது.

இந்த இரு கட்சிகள் போல் 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வீதியில் தங்களுக்கான பிரசார வரைபடக் குறியீடுகளை அமைக்கும் போது, அது பாரியளவிலான போக்குவரத்து நெருக்கடியை உருவாக்கி விடும் என்பதில் ஐயமில்லை.

தேர்தலின் பின்னரும் நீண்ட நாட்களுக்கு இந்த குறியீடுகள் அழியாது வீதியிலேயே இருக்கும் தன்மையினைக் கொண்டுள்ளன.இது ஆரோக்கியமான விடயமாக இருக்காது.

கவனமெடுக்கப்படுமா?

தேர்தல் விதிமுறைகளை மீறி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் பிரசார உத்திகளை பயன்படுத்துதல் என இவை ஒருபுறம் நெருக்கடிகளை தோற்றுவித்தாலும் வீதியில் வரையப்பட்டு மேற்கொள்ளப்படும் பிரசார உத்தி ஆரோக்கியமானதன்று.

வீதியின் மீது போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் குறியீடுகள் வரையப்படும்.இது போக்குவரத்தினை இயல்பாக ஒழுங்குபடுத்துவதோடு விபத்துக்களை தவிர்ப்பதற்கும் உதவியாக அமைகின்றது.

அவற்றுக்கு மேலதிகமாக வேறு எந்தக் குறியீடுகளையும் வீதியின் மீது வரைய அனுமதித்தல் என்பது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதிலும் சாராதிகள் விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் வீதியினை பயன்படுத்துவதிலும் பாரியளவிலான நெருக்கடிகளை ஏற்படுத்தி விடும் என்பதில் ஐயமில்லை.

தேர்தல் சட்ட விதிமுறைகளை வகுத்து அதன்படி செயற்படாத வேட்பாளர் மற்றும் கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மெத்தனப் போக்குடையவையாக இருப்பதாலேயே பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைக் கூட சாதாரணமாக செய்துவிட்டு போகின்றனர் என இது தொடர்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சிலருடன் உரையாடிய போது அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

இது இங்கு மட்டுமல்ல.நாட்டின் எல்லா பகுதிகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒவ்வொரு தேர்தலின் போதும் நடந்தபடி தான் இருக்கின்றது.யாரும் நடவடிக்கைகள் எடுத்தாக தெரியவில்லை.

செய்பவர்களும் திருந்துவதாக இல்லை என தன் ஆதங்கத்தினை அவர்களில் ஒருவர் வெளிப்படுத்தியிருந்ததும் நோக்கத்தக்கது.

வீதிகளை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தவிர்ப்பதே ஆரோக்கியமான சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கு உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கப் போவதில்லை.

NO COMMENTS

Exit mobile version