தன்னை அவதூறாகப் பேசியதாகக்கூறி, அரச தொலைக்காட்சியான சுயாதீன தொலைக்காட்சி
வலையமைப்புக்கு (ITN) எதிராக 10 கோடி ரூபாயை நஷ்ட ஈடாகக்கோரி முன்னாள்
ஆளுநரும், தேர்தல் கண்காணிப்பு அமைப்பான CaFFE-ன் முன்னாள் நிறைவேற்று
பணிப்பாளருமான ரஜித் கீர்த்தி தென்னக்கோன் சட்ட கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
2025 ஜனவரி 9 அன்று ஒளிபரப்பப்பட்ட செய்தி அறிக்கையிலும், ஜனவரி 10 அன்று
ஒளிபரப்பப்பட்ட ‘பத்தரென் எஹா’ (Pattaren Eha) காலை நிகழ்ச்சியிலும் வெளியான
கருத்துக்களுக்காக இந்த சட்ட கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.
நற்பெயருக்கு கடுமையான பாதிப்பு
விவசாய அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஒரு ஊடகச் சந்திப்பின்போது வெளியிட்ட
கருத்துக்களும், நிகழ்ச்சி தொகுப்பாளரின் மேலதிக கருத்துக்களும் பொய்யானவை
மற்றும் அவதூறானவை என்று அந்த சட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒளிபரப்பு மற்றும் இணையவழிப் பரவல் தனது நற்பெயருக்கு கடுமையான பாதிப்பை
ஏற்படுத்தியுள்ளதாக தென்னக்கோன் கூறியுள்ளார்.
தன்னை ஊழல்வாதியாகவும் நேர்மையற்றவராகவும் சித்தரித்து, அவதூறு ஏற்படுத்தும்
நோக்குடன் இந்த உள்ளடக்கம் ஒளிபரப்பப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்
சாட்டியுள்ளார்.
இந்த சட்ட கடிதம் குறித்து ITN இதுவரை எந்தவொரு பதிலையும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகின்றது.
