Home இலங்கை சமூகம் யாழில் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள காணிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

யாழில் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள காணிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

0

யாழ்ப்பாண மாவட்ட காணி பயன்பாட்டு குழுவினால் வழங்கப்பட்ட அரச காணிகள் வழங்கப்பட்ட திகதியில் இருந்து 06 மாத காலம் தொடக்கம் ஒரு வருடம் வரையில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தால் அக் காணிகளுக்கு அனுமதியை இரத்து செய்யுமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் நேற்றைய தினம்
(17.12.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி தொடர்பான விடயங்கள் ஆராய்வு

இக் கூட்டத்தில் அரசாங்க அதிபரால் ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியான காணி
பயன்பாட்டு விடயங்கள் ஆராயப்பட்டு, பின்வரும் அறிவுறுத்தல்கள்
வழங்கப்பட்டதுடன், சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

1. மாவட்ட காணி பயன்பாட்டு குழுவினால் வழங்கப்பட்ட அரச காணிகள் வழங்கப்பட்ட
திகதியில் இருந்து 06 மாத காலம் தொடக்கம் ஒரு வருடம் வரையில்
பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தால் – அக் காணிகளுக்கு அனுமதியை ரத்து
செய்யுமாறும் அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.

2. காணிகள் தொடர்பாக பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டுக் குழுவில் விண்ணப்பங்களை
சமர்ப்பித்து பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டுக் குழுவில் அனுமதியைப் பெற்ற
பின்னர் பிரதேச மட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்று பின்னர்
மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் எனத்
தெரிவித்தார். 

3. வன வளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆளுகைக்கு உட்பட்டதும்
வெவ்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பாக
தீர்மானம் எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் கலந்துரையாடி
முடிவெடுப்பதாகவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

4. பிரதேச செயலாளர் பிரிவுகளில் அரசகாணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு
காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

5.அரச காணிகளை பொதுமக்களுக்கு அல்லது பொதுத்தேவைகளுக்காக அவசியத் தேவைக்கான
காணிகளை மட்டும் வழங்குமாறும் அரசாங்க அதிபர் கூறியதுடன், அவசியமற்ற
விடயங்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறும் உரிய முறையில் உறுதிப்படுத்தப்பட்ட
பின்னர் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள்,
மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் உதவிப்பணிப்பாளர், கடற்றொழில் திணைக்கள
அதிகாரி, கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன
பொறியியலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர்,
மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை
உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள்,
விவசாயத்ததிணைக்கள அதிகாரிகள், நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள், கால்நடை
அபிவிருத்தி சுகாதார திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும்
காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version