Home இலங்கை சமூகம் யாழில் சிவப்பு நிறமாக குடிநீர் – மாநகர சபை அசமந்தம்: மக்கள் கடும் விசனம்

யாழில் சிவப்பு நிறமாக குடிநீர் – மாநகர சபை அசமந்தம்: மக்கள் கடும் விசனம்

0

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தின் (Jaffna) சில பகுதிக்கு மண் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யாழ்.மாநகர சபையினால் (Jaffna Municipal Council) வழங்கப்பட்ட குடிநீரே இவ்வாறு சிவப்பு நிறமாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த நீரை அருந்தவே முடியாது எனவும், ஏனைய சலவை நடவடிக்கைகளுக்கும், சமையலுக்குக் கூட இதனைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் யாழ்ப்பாண மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ்.மாநகர சபையின் ஆணையாளர்

பாவனையாளர்கள் யாழ். மாநகர சபை அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத நிலையில் தொடர்ந்து சிவப்பு நிற குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது தொடர்பில் யாழ்.மாநகர சபையின் (Jaffna Municipal Council) மாநகர ஆணையாளரிடம் வினவிய போது, யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் அமைப்பில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை சரிசெய்வதற்காக திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பாதாள சாக்கடையில் செம்மண் குவிந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், இந்த நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மூன்று நாட்களாக யாழ்ப்பாண மக்கள் குடிநீரின்றி தவித்து வருவதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version