வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் மிக சிறப்பாக நடைபெற்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று (27.10.2025) விசேட அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து பேரழகன் ஆறுமுகப் பெருமான் வெளிவீதி உலா வந்து சூரனுடன் போர் புரிந்தார்.
சூரபத்மன், அவனது தம்பி தாரகாசூரன், யானை மற்றும் சிங்க முகத்துடன் வந்த சூரபத்மனை, தன் வேல் கொண்டு ஆறுமுகப் பெருமான் வதம் செய்து, சேவல் மற்றும் மயிலாகவும் மாற்றிய நிகழ்ச்சி நடந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள்
இதன்போது, ஆயிரக்கணக்கான மக்கள் ஆறுமுகப் பெருமான் சூரனை வதம் செய்து அருள்பாலித்த காட்சியை கண்ணீர் மல்க கண்டுகளித்தனர்.
நல்லுர் ஆலய வீதியில் ஆறுமுகப் பெருமான் வேதபாராயணங்கள் மற்றும் விண்ணை அதிர வைத்த கட்டியத்துடன் தனது படையுடன் சென்று போரிட்ட காட்சி அந்த கந்தப்பெருமானே நேரில் நின்று போரிட்டு போல் காட்சியளித்தாக பக்தர்கள் தெரிவித்தனர்.
முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையே நடைபெறும் போரை மையமாக கொண்டே சூரசம்ஹாரம் ஆலயங்களில் நடைபெற்று முடிந்தமையடுத்து, இறுதி நாளான இன்று (28) திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்று கந்தசஷ்டி விரதம் நிறைவடையும்.
