Home இலங்கை சமூகம் யுத்தம் முடிந்து 15 வருடங்களாகியும் யாழில் 1,500 குடும்பங்கள் அகதி வாழ்வு

யுத்தம் முடிந்து 15 வருடங்களாகியும் யாழில் 1,500 குடும்பங்கள் அகதி வாழ்வு

0

வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள
நிலையிலும் யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் மாத்திரம் 1,500இற்கும் மேற்பட்ட
குடும்பங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்களில் 10 குடும்பங்கள் இன்னமும் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருவதாக
கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்
நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடமாகாண ஆளுநர் பி.எஸ். எம்.
சார்ள்ஸ் (P.S.M. Charles) மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) ஆகியோர் தலைமையில் இடம்பெற்றதாக
மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவில் அபகரிக்கப்படும் தமிழர்களுடைய பூர்வீக நிலம்: ரவிகரன் சீற்றம்

மீள்குடியேற்ற வேலைத்திட்டம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 4,567 மக்களுக்கு அரசாங்கம் இதுவரை
எதனையும் செய்யவில்லை என, இக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ். மாவட்ட பதில்
செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் ஆளுநருக்கு அறிவித்தார். 

“1,512 குடும்பங்களைச் சேர்ந்த 4,567 பேர் இருக்கின்றனர். இவர்களில் 10
குடும்பங்கள் நலன்புரி நிலையங்களிலும் 1,502 குடும்பங்கள் உறவினர் நண்பர்களின்
வீடுகளில் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை. இவர்கள்
மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள்.”

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வருடத்திற்குள் மீள்குடியேற்ற
நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு
ஆளுநர் அறிவித்துள்ளார்.

இதுவரை மீள்குடியேறாத மக்களை மீள்குடியேற்றுவதற்கான வேலைத்திட்டம் மற்றும்
மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட ஏனைய வசதிகளை
வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஆளுநர் மாவட்ட செயலாளருக்கு
பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயம் – தவிக்கும் பெற்றோர்

 சட்ட நடவடிக்கை 

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

“உரித்து” காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த
தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கமையை மே மாத நிறைவுக்குள் வடக்கு
மாகாணத்தில் 60,000 பேருக்கான காணி உறுதிப் பத்திரங்கள்
கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு
ஆளுநர் அறிவித்துள்ளதாக வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கீழ் நீர் தொடர்பான ஆய்வுகள் உரியவாறு மேற்கொள்ளாது சில தனியார்
நிறுவனங்கள் குழாய் கிணறுகளை அமைப்பதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

இதனை அடுத்து, இந்த விடயம் தொடர்பில்
சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஆளுநர்,
விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு
பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கினால் தமிழர்களுக்கு கிடைக்க போவது என்ன..! பகிரங்க கேள்வி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   

NO COMMENTS

Exit mobile version