வலி. வடக்கில் பல காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு, இருந்தாலும் 2013ஆம்
ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட
வேண்டிய காணியாகவே காணப்படுகிறது என மனிதவுரிமை செயற்பாட்டாளர் ஜட்சன்
தெரிவித்துள்ளார்.
வலி. வடக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள காணிகளின் உரிமையாளர்களின்
பிரதிநிதிகள் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், “தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 2800 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட
வேண்டியுள்ளதாக மாவட்ட செயலர் கூறுகின்றார்.
ஆனால் 2808 ஏக்கர் என பிரதேச
செயலக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் 2013ஆம் ஆண்டு வெளியான வர்த்த மானியில் 6317 ஏக்கர் காணிகள்
இராணுவத்தினர் வசமுள்ளதாகவும், அவற்றை இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்க
உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னரான கால பகுதியில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கட்டம் கட்டமாக பல
பகுதிகளில் உள்ள காணிகள், வீதிகள் , ஆலயங்கள் என்பவற்றை மீள மக்களிடம்
கையளித்து வந்துள்ளன.
மனு கையளிப்பு
அந்த காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்ட இருந்தாலும் 2013ஆம் ஆண்டு
வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய
காணியாகவே காணப்படுகிறது.
எனவே 2013ஆம் ஆண்டு வெளியான வர்த்த மானியை உடனடியாக இரத்து செய்ய இந்த
அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு அந்த வர்த்தமானியை இரத்து
செய்தால் மாத்திரமே தற்போது மக்கள் மீள் குடியேறியுள்ள காணிகளில் அவர்கள்
நின்மதியாக வாழ முடியும்.
அதேவேளை, மக்களின் காணிகளில் இதுவரை காலமும் இராணுவத்தினர் விவசாய
நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியுள்ளனர்.
அவர்கள் தனியார்
காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக காணி உரிமையாளர்களுக்கு
இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுடன் , காணிக்கான குத்தகை பணத்தினையும் வழங்க
வேண்டும்” என தெரிவித்தார்.
அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட மயிலிட்டி மீள் குடியேற்ற சங்க
தலைவர் யோசப் அல்பேர்ட் அலோசியஸ் தெரிவிக்கையில், “வலி வடக்கு பிரதேசம் எங்கே இருக்கிறது. அங்கு வாழும் மக்களின் பிரச்சினை என்ன
என்பது தொடர்பில் எதுவும் அறியாதவர்களாக ஜனாதிபதி செயலகத்தில் உள்ளவர்கள்
இருப்பது எமக்கு மன வருத்தத்தை தந்துள்ளது.
இராணுவத்தின் பிடியில் உள்ள எமது காணிகளை விடுவிக்க கோரி கடந்த 21ஆம் திகதி
காணிகளை இழந்த மக்கள் நாம் ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில்
ஈடுபட்டோம்.
அதனை தொடர்ந்து ஜனதிபதி செயலகத்தில் மனுவ கையளிக்க சென்ற போது,
அங்கிருந்தவர்களுக்கு எமது பிரச்சனைகள் தொடர்பில் எதுவும் தெரியாது.
இதுவரை காலமும் எமது காணிகளை விடுவிக்க கோரி நாம் பல்வேறு வழிகளில் பல
போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் அது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினர்
அறியாமல் இருப்பது எமக்கு கவலையளிக்கிறது” என மேலும் தெரிவித்தார்.