Home இலங்கை சமூகம் திருகோணமலையில் பிக்குவால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள்!

திருகோணமலையில் பிக்குவால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள்!

0

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் இன்று (16.11.2025) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் பிக்கு ஒருவரின் தலைமையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுள்ளன.

அதுமாத்திரமன்றி, இதனை பார்வையிட சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (15.11.2025) இரவோடு இரவாக குறித்த பகுதியில் பெயர்ப்பலகை நடப்பட்டு, கட்டுமானப் பொருட்கள் இறக்கப்பட்டு கட்டுமான வேலைகள் இடம்பெற்றுவந்தன.

சட்டவிரோத கட்டுமானப்பணி

குறித்த சட்டவிரோத கட்டுமானப்பணிகள் தொடர்பாக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் திருகோணமலை துறைமுக காவல்நிலையத்தில் இன்று (16.11.2025) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த கட்டுமான பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக நீதிமன்றில் காவல்துறையினரால் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

குறித்த விகாரையின் பகுதியில் ஏற்கனவே சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலையை அகற்றுவதற்காக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் இம்மாதம் 4 ஆம் திகதி நடவடிக்கை எடுத்த போதும் குறித்த சட்டவிரோத கட்டடம் தொடர்பில் மாநகர சபையினால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினாலும் ஒரு வாரம் காலஅவகாசம் குறித்த விகாரையின் விகாரதிபதியினால் காவல்துறையிடம் கேட்டிருத்தமைக்கு அமையவும் அதில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன.

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

இந்நிலையில், குறித்த பகுதிகள் மேலும் ஒரு நிரந்தர கட்டுமானங்களுக்குரிய பணிகள் இடம்பெற்று வந்தது.

இதற்காக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, நகர சபை உள்ளிட்ட திணைக்களங்களிடம் எவ்வித அனுமதியும் பெறப்படாமல் குறித்த பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை பார்வையிடச் சென்ற ஊடகவியலாளர்களும், அதிகாரிகளும் அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து வேளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version