பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது
என அந்தக் கப்பல் நிறுவத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் கே.எம்.ஜெயசீலன்
தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றையதினம்(15.10.2025) நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும்
தெரிவிக்கையில்,
“எமது கப்பல் சேவையானது, கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஒரு
வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஆண்டில் கப்பல் சேவை
காலடி எடுத்து வைத்துள்ளது.
தீபாவளி தினம்
கடந்த ஆண்டு பருவப் பெயர்ச்சி மழை காரணமாக நவம்பர் 02ஆம் திகதியில் இருந்து
ஜனவரி இரண்டாவது வாரம் வரை எமது சேவைகளை நாங்கள் இடைநிறுத்தியிருந்தோம்.
இம்முறை நாங்கள் அவ்வாறு எந்தவிதமான இடைநிறுத்தலையும் மேற்கொள்ள மாட்டோம்.
காலநிலை சீராக இல்லாமல் விட்டால் மாத்திரம் கப்பல் போக்குவரத்தை
நிறுத்திவிட்டு மீண்டும் காலநிலை சீராகியதும் கப்பல் போக்குவரத்தை
ஆரம்பிப்போம்.
தீபாவளியை முன்னிட்டு தற்போது எமது கப்பல் சேவை தினசரி இடம்பெற்று வருகின்றது.
ஒக்டோபர் 28 வரை தினமும் போக்குவரத்து சேவை இடம்பெறும். தீபாவளி தினத்தன்று
மாத்திரம் சேவை இடம்பெறாது.
ஒக்டோபர் 29ஆம் திகதியில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு, கப்பல்
திருத்த பணிகளுக்காக எமது கப்பல் சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தவுள்ளோம்.
பின்னர் நவம்பர் முன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இருந்து மீண்டும்
கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்போம்.
தீர்வை அற்ற கடைத் தொகுதி
தற்போது நாங்கள் இருவழி பயணத்திற்கு 28 ஆயிரத்து முந்நூறு ரூபாவை
அறவிடுகின்றோம். இலங்கையில் இருந்து செல்வதற்கு 12 ஆயிரத்து முந்நூறு ரூபாவும்,
இந்தியாவில் இருந்து வருவதற்கு 16 ஆயிரம் ரூபாவும் அறவிடுகின்றோம். தைப்பொங்கலை முன்னிட்டு சிறப்பு சலுகைகளையும் நாங்கள் வழங்கவுள்ளோம்.
மேலும், தற்போது மேற்குறித்த கட்டணத்துடன் 23 கிலோ எடையுடைய பொருட்களை எடுத்துச் செல்ல
அனுமதிக்கின்றோம். அதைவிட 25 கிலோ மேலதிகமாக எடுத்து வருவதற்கு மேலதிக இலங்கை
பணத்தில் 8 ஆயிரத்து ஐநூறு ரூபாவை அறவிடுகின்றோம்.
அதற்கும் அதிகமாக கொண்டுவர
விரும்பினால் பொதி கட்டணம் சற்று அதிகமாக காணப்படும்.
நாங்கள் நமது கப்பலில் தீர்வை அற்ற கடைத் தொகுதி ஒன்றை கடந்த ஒரு மாதத்திற்கு
முன்னர் ஆரம்பித்துள்ளோம். எனவே நீங்கள் அதிலும் உங்களுக்கு தேவையான பொருட்களை
கொள்வனவு செய்யலாம்” எனக் கூறியுள்ளார்.
