Home இலங்கை சமூகம் கதிர்காமத்தில் உள்ள சட்டவிரோத சொத்து: மறுப்பு தெரிவித்த கோட்டாபய

கதிர்காமத்தில் உள்ள சட்டவிரோத சொத்து: மறுப்பு தெரிவித்த கோட்டாபய

0

கதிர்காமத்தில் உள்ள ஒரு சொத்துக்கும், அதற்கு ஜி. ராஜபக்ச என்ற பெயரில்
சட்டவிரோதமாக செலுத்தப்பட்டுள்ள மின்சார கட்டணங்களுக்கும் தனக்கும்  தொடர்பு இல்லை
என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மறுத்து வருகிறார். 

கேள்விக்குரிய இந்த சொத்து கதிர்காமத்தில் உள்ள மாணிக்க கங்கைக்கு
அருகிலுள்ள ஒரு ஒதுக்கீட்டு நிலத்தில் அமைந்துள்ளது, இது 12 அறைகளைக் கொண்ட
ஒரு கட்டிடத்தையும் கொண்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணையின் போது, கோட்டாபய அந்தச்
சொத்துக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதை மறுத்துள்ளார், அதே நேரத்தில்
மின்சாரக் கட்டணங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர்
தெரிவித்துள்ளார். 

சிஐடி விசாரணை 

முன்னதாக, அரச நிலத்தில் சட்டவிரோதமாக இந்த கட்டிடம் கட்டப்பட்டமை குறித்து
குற்றப்புலனாய்வினர் விசாரணையைத் தொடங்கினர். விசாரணை ஆரம்பத்தில் நல்லாட்சி அரசாங்க காலத்தின் போது ஆரம்பமானது. ஆனால்
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை
நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் விசாரணைகளில், சம்பந்தப்பட்ட சொத்து 2010இற்கு முன்னர் ஒரு இராணுவக் குழுவின் உழைப்பால் கட்டப்பட்டது
என்பதும் தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக
நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவர்,
கட்டுமானப் பணிக்குப் பின்னர் கட்டிடத்தில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version