கொத்மலை அணைக்கட்டு அமைக்கப்படும் போது ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் இலங்கை விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி அறிக்கை இன்று வரை மறைக்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிஷ கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
அதற்கு என்ன நடந்தது என்று தெரியாது. அதன் பிரதிபலன்களே இன்று நடக்கும் அழிவுகளாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நடந்த பேரிடர் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிலத்திற்கு அடியில் ஏற்பட்ட மண்சரிவு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கொத்மலை நீர் மின் நிலையம் அமைப்பதற்கு அன்றிருந்த அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
நிர்மாண நடவடிக்கைகள் நடைபெறும் போது நிலத்திற்கு அடியில் ஏற்பட்ட மண்சரிவை நிர்மாண நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிறுவனத்தினால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது.
அதன் பின்னர் போராசிரியர் w.p.வித்தானகே, போராசியர் குலசிங்கம் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் அந்த அறிக்கைகளுக்கு என்ன நடந்தது.
அன்றைய அரசாங்கம் அதை வெளிவிடவில்லை. குறித்த போராசிரியர்கள் இருவரும் மரணித்து விட்டனர்.
கொத்மலை அணைக்கட்டை அமைக்க வேண்டாம் என்றே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் இது குறித்த பகுதியில் தாக்குப் பிடிக்க கூடியதல்ல என தெரிவிக்கப்பட்டது.
30-40 வருடங்களுக்கு முன்னர் இது தொடர்பில் அறிந்தவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இவை. இன்று கொத்மலையில் நடந்துள்ளது. பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
