முல்லைத்தீவு (Mullaitivu) – குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.
B1053/2022 என்ற இலக்கமுடைய குறித்த வழக்கு நேற்றையதினம் (25) முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் (
T. Raviharan) மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் (Rattinarasa Mayuran), கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் (Chinnarasa Lokeswaran) ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.
விசாரணை
இந்நிலையில், வழக்கு விசாரணை விவாதங்கள் நடைபெற்று எதிர்வரும் வருடம் (2025) ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்கு மீண்டும் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் குறித்த வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.
குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோரை விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு காவல்நிலையத்திற்கு , வருமாறு காவல்துறையினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதன்போது காவல்நிலையம் சென்றவர்களை அங்கு வைத்து கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.