Home இலங்கை சமூகம் கல்முனை தமிழர் பகுதிகளில் மீண்டும் காணி அபகரிப்பா.. சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆவேசம்

கல்முனை தமிழர் பகுதிகளில் மீண்டும் காணி அபகரிப்பா.. சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆவேசம்

0

கல்முனை வடக்கு தமிழர் பிரதேசங்களில் மீண்டும் காணி ஆக்கிரமிப்பு
தொடர்கின்றதா? இன, மத பேதமற்ற அரசு எனக் கூறும் அநுர அரசு இத்தகைய சட்டவிரோத
இனவாத காணி ஆக்கிரமிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என கல்முனையில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் சமூகச்
செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கல்முனை இலங்கை வங்கி சந்தியில் மேற்குப் புறமாகவுள்ள வீதியோரத்தில் சுதேச
உணவு வழங்கும் கடைத்தொகுதி கட்டுவதற்கு, தனியாரும் கல்முனை தெற்கு பிரதேச
செயலக அரச அலுவலர்களும் வந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வந்த சம்பவத்தை
அடுத்து இந்தப் பதற்ற நிலை தோன்றியுள்ளது எனக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, கல்முனை ஊடக மையத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் பிரபல
சமூகச் செயற்பாட்டாளர்களான முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்
சந்திரசேகரம் ராஜன், தா. பிரதீபன், மாதர் சங்கத் தலைவி திருமதி எஸ்.
நித்தியகைலேஸ்வரி ஆகியோர் ஊடகங்களுக்கு ஆக்ரோஷமாக விளக்கம் அளித்தனர்.

காணி உரிமை

இது பற்றி சமூகச் செயற்பாட்டாளர் சந்திரசேகரம் ராஜன் விளக்கம் அளிக்கையில்,

“கல்முனை வடக்கு எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் இவ்வாறு கட்டுமானப் பணியை
மேற்கொள்வதாயின் முதலில் பிரதேச செயலாளரிடம் அனுமதி பெறப்பட்டதா? இல்லை.

முதலில் ஒருவர் வந்தார். 30 வருட காணி உரிமை இருக்கின்றது என்றார்.

எங்கே
என்று கேட்டவுடன் திரும்பிப் போய்விட்டார்.

பின்பு கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக அதிகாரிகள் வந்தார்கள். கடை கட்ட
எங்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை அனுமதி இருக்கின்றது என்றார்கள். நான்
உடனடியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளரைச் சந்தித்தேன்.
கட்டுமானத்துக்கு அல்ல கண்டைனர் வைத்து தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கி
இருக்கின்றோம் என்றார்.

அண்மையில் வீரமுனையில் வீதிக்குச் சொந்தமான இடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுக் கூட்டத் தீர்மானம் எடுக்கப்பட்டும், ஒரு பெயர்ப்பலகையைக் கூட நாட்ட
முடியாத இந்த வீதி அபிவிருத்தி அதிகார சபை இன்று இதற்கு அனுமதி வழங்கி
இருக்கின்றதாம்.

அங்காடிக் கடைகளை வைக்கக்கூடாது, பெட்டிக்கடைகளை வைக்கக் கூடாது என்று
எழுப்பி வருகின்ற நிலையில் இந்த இடத்தில் இந்த வியாபாரத்தை நடத்துவதற்கு
அனுமதி வழங்கி இருக்கின்றதா?

நீரேந்துப் பகுதி 

இந்த வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்
இன ரீதியாகச் செயற்படுகின்றார்களா? அல்லது வேண்டும் என்றே தமிழ் மக்களைப்
புறக்கணிக்கின்றார்களா?

இன, மதவாத மற்ற அநுர அரசிடம் இவர்களது இனவாதப் போக்கை முன்வைத்து
நீதிமன்றங்களுக்குச் செல்ல இருக்கின்றோம்.

இது ஒரு நீரேந்துப் பகுதி என்பது சகல இன மக்களுக்கும் தெரியும்.

இதனைத்
தடுத்தால் கடந்த காலங்களைப் போல் மீண்டும் வெள்ளம் அந்தப் பிரதேசம் எல்லாம்
நிரம்பும். ஆகவே, இந்தச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.

கல்முனையில் உள்ள சந்தாங்கேணி மைதானம் நானறிந்த வகையில் குளமாகத்தான்
இருந்தது.

இன்று அது மைதானமாக மாறி இருக்கின்றது .

கல்முனை தமிழர் பிரதேசம் நகரத்தில் நரகமாக இருக்கின்றது. ஒழுங்கான வீதிகள்
இல்லை. மின்விளக்குகள் இல்லை.

அதைக் கேட்பாரும் இல்லை பார்ப்பாரும் இல்லை.

விரைவில் தேர்தல் வருகின்றது. அதற்காக இந்த இனவாதச் செயற்பாட்டை
முன்னெடுக்கின்றார்கள்.

ஆகவே, தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இதற்குப் பின்னால் சிக்கிவிடக் கூடாது.

எனவே, மக்கள் விரும்பாத இந்த கட்டுமானப்பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version