யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றையதினம் (29) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது பெரிய மனித
எலும்புத் தொகுதியுடன் சிறிய குழந்தையின் மனித எலும்புத் தொகுதியும் அடையாளம்
காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்து இன்றையதினம் (30)
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்
மேலும் தெரிவிக்கையில்,
பெரிய மனித எலும்புத் தொகுதியுடன் சிறிய எலும்பு தொகுதியானது அரவணைக்கப்பட்ட
நிலையில் குறித்த எலும்புத் தொகுதிகள் காணப்படுகின்றன.
அகழ்வுப் பணிகள்
அது சுத்தப்படுத்தப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு இன்று காலை முழுமையாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இன்று வரையான காலப்பகுதியில் செம்மணியில் 115 எலும்பு தொகுதிகள் அடையாளம்
காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 102 எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியின் இரண்டாவது
கட்டத்தின் 25ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றையதினம் இடம்பெற்றன.
எலும்புத் தொகுதி அடையாளம்
இந்நிலையில் இன்றையதினம் 4 புதிய எலும்பு தொகுதிகள் அகழ்வு பிரதேசம் ஒன்றில்
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் இன்றையதினம் மூன்று மனித எலும்பு
தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட
எலும்பு தொகுதிகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளன.
இன்றைய நாள் முடிவில் இதுவரை 115 எலும்பு தொகுதிகள் அடையாளம்
காணப்பட்டுள்ளதுடன் 102 எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
