செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துமாறும், அதன்
வேகத்தைக் குறைக்குமாறும் உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு திருத்தந்தை 14 ஆம்
லியோ தனது முதலாவது முக்கிய கொள்கை ஆவணத்தின் மூலம் அவசர
அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று(25.05.2026) வெளியிடப்பட்ட இந்த ஆவணத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் தவறான
தகவல்களைப் பரப்புவதாகவும், மோதல்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இது உலகை முடிவில்லாத போர்ப் பாதைக்கு இட்டுச் செல்லும்
அபாயம் கொண்டதென்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி
வத்திக்கானில் நடைபெற்ற இந்த ஆவண வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய
அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தையான லியோ, சில தன்னாட்சி ஆயுத
அமைப்புகள் “மனிதர்களின் கட்டுப்பாட்டு அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட நிலைக்கு”
வளர்ந்துள்ளமை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏஐ தரவுகளின் உரிமைகளை முழுமையாகத் தனிப்பட்ட நிறுவனங்களின் கைகளில்
விட்டுவிடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள லியோ, கொள்கை வகுப்பாளர்கள்
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இந்தத் தொழில்நுட்பத்திலிருந்து
குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் வலுவான சட்டக் கட்டமைப்புகள்
மற்றும் சுயாதீனமான கண்காணிப்பு அவசியம் என கேட்டுக்கொண்டார்.
போர் நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு கடுமையான தார்மீகக் கட்டுப்பாடுகளுக்கு
உட்பட்டதாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, உயிரிழப்புகளை
ஏற்படுத்தும் முடிவுகளை தொழில்நுட்ப அமைப்புகளிடம் ஒப்படைப்பது “அனுமதிக்க முடியாதது” என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், வரலாற்றில் அட்லாண்டிக் கடந்த அடிமை வர்த்தகத்தை 19 ஆம் நூற்றாண்டு
வரை கத்தோலிக்க திருச்சபை கடுமையாகக் கண்டிக்கத் தவறியதை ஒப்புக்கொண்ட
திருத்தந்தை, அதற்காகத் திருச்சபையின் சார்பில் தனது மனப்பூர்வமான
மன்னிப்பையும் கோரியுள்ளார்.
Source: https://tamilwin.com/article/leo-the-14th-highlighted-the-consequences-of-ai-1779780878
