ஸ்பேஸ்எக்ஸின் (SpaceX) செயற்கைக்கோள் பிரிவான எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்கிற்கு இலங்கையில் செயற்பட உரிமம் வழங்கப்பட்ட போதிலும், சேவையுடன் இணைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சாதனங்களை இறக்குமதி செய்வதற்காக, அந்த நிறுவனம் இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்டார்லிங்க் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு அதிகாரபூர்வமாக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை வழங்கியது.
இதன் மூலம் ஸ்டார்லிங் நிறுவனம், இலங்கையில் செயற்கைக்கோள் பிரோட்பேண்ட் சேவைகளை வழங்கும் உரிமையை பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கையின் சுங்க விதிமுறைகள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தொழிலதிபர் எலோன் மஸ்க்கும் இந்தோனேசியாவில் சந்தித்தபோது, இது குறித்து விவாதித்திருந்தனர்.
இருப்பினும், சேவையைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களின் நலனுக்காக நிறுவப்பட வேண்டிய இணைப்பு சாதனங்களை இறக்குமதி செய்ய ஸ்டார்லிங்க் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த தாமதம், குறித்த பொருட்களின் இறக்குமதியை நிர்வகிக்கும் இலங்கையின் சுங்க விதிமுறைகள் குறித்து ஸ்டார்லிங்க் கவலை கொள்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக ஆணைக்குழு தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
ஸ்டார்லிங்கிற்கு உரிமம் வழங்குவதற்காக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் ஒன்றையும் இலங்கையின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.