மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகள்வுகள் வேலணை சாட்டி மாவீரர்
துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின்
ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று (21.11.2025) ஈகச் சுடரேற்றப்பட்டு ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
மாவீரர்களின் உறவுகள்
இதனிடையே நாளை காலை 9.30 மணியளவில் தீவகத்தில் வாழும் மாவீரர்களின் உறவுகள்
உரித்தாளிகள் மதிப்பளித்து கௌரவம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் பொது விளையாட்டரங்கின் திறந்தவெளி அரங்கில்
குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஏற்பாட்டுக் குழு
தெரிவித்துள்ளது.
இன்று 21 ஆம் திகதி ஆரம்பமாகும் மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் நூற்றுக்கணக்கான உறவுகளின் பங்கேற்புடன் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.
செய்தி – கஜி
வவுனியா
வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் முதல்நாள் நிகழ்வு
வவுனியா
மாவீரர் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் நினைவு நாளின்
வாரத்தின் முதலாவது நாளான இன்று (21.11.2025) மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு
வவுனியாவில் இடம்பெற்றது.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தோணிக்கல் பகுதியில்
அமைந்துள்ள அவர்களுடைய அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு தீபமேற்றியதுடன் மலர்
அஞ்சலியும் செய்திருந்தனர்.
செய்தி – கபில்
யாழ்ப்பாண பல்கலை
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகள்வுகள் இன்று யாழ்ப்பாண
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் குறித்த
நினைவேந்தல் இடம்பெற்றது.
செய்தி – தீபன்
தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்
தாயக மண் மீட்பு போரிலே தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி
வணங்கும் மாவீரர் நாளுக்கான முன்னாயத்த பணிகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும்
உணர்வுபூர்வமாக இடம்பெற்றது வருகிறது.
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி
வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்மக்களால்
உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படவுள்ளது.
அந்த வகையிலே இன்று (21) காலை தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்
வாரத்தினுடைய ஆரம்ப நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
செய்தி – தவசீலன்
உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்
ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வார நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இன்றைய மாவீரர் வார ஆரம்ப நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என
பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
செய்தி – எரிமலை
வடமராட்சி சுப்பர்மடம்
யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு
குருதிக்கொடையளிக்கும் நிகழ்வு இன்று காலை 9:00 மணியளவில் சுப்பர் மடம் பொது
மண்டபத்தில் இடம் பெற்றது. குருதியினை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை குருதி
வங்கி பிரிவினர் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று மாவீரர் நினைவேந்தல் கொட்டகை
அமைக்கப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம் பெற்றது.
இதில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இதில் பருத்தித்துறை நகரசபை சபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல்,
மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.
செய்தி – எரிமலை
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் உணர்வு பூர்வமாக மாவீரர் வாரம்
அனுஷ்டிக்கப்பட்டது.
சபையின் ஏற்பாட்டில் மானிப்பாய் நகர் முழுவதும் சிவப்பு மஞ்சள் கொடி
கட்டப்பட்டதுடன் சபை அலுவலகம் முன்பாகவே விசேடமாக அமைக்கப்பட்ட வளாகத்தில்
அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து ஏற்றிய தீபங்களுடன் சபைக்கு பிரசன்னமான
உறுப்பினர்கள் அங்கும் அஞ்சலி செலுத்தினர்.
செய்தி – கஜி
