திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை குறித்து இலங்கை அமரபுர மகா
நிகாயவின் மகாநாயக்க தேரரான கரகோட உயன்கொட மைத்ரி மூர்த்தி தேரர்,
ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
1951ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும், பௌத்த விவகாரங்கள் திணைக்களத்தின் கீழ்
பதிவுசெய்யப்பட்டதும், 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி வழங்கிய காணி உறுதிப்பத்திரம்
மூலம் உரிமை உறுதிப்படுத்தப்பட்டதுமான ஒரு சட்டப்பூர்வ விகாரைக்கு எதிராகச்
சில அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிக்குகள் மீது தாக்குதல்
இந்த அச்சுறுத்தலுக்கு நேற்று பொலிஸாரால் பிக்குகள் தாக்கப்பட்டமைக்கு
வன்மையாக கண்டனம் தெரிவிப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான பிக்கு தாக்கப்பட்டதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,
பொலிசின் இந்தச் செயல் அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தை அப்பட்டமாக மீறிய செயல்
என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பொலிசின் சட்டவிரோத நடவடிக்கை குறித்து ஜனாதிபதி உடனடியாக விசாரணை
மேற்கொள்வதுடன், குறித்த கட்டடத்தை அகற்ற வேண்டாம் என்றும், விகாரை மற்றும்
பிக்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் மகாநாயக்க
தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
