முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கிய தற்போதைய அரசாங்கம், தனது பாதுகாப்பை ஏன் மீண்டும் வழங்க முடிவு செய்துள்ளது என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
தென்னிலங்கை பத்திரிகையொன்றுக்கு வழங்கிய அறிக்கையில் இந்த கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.
வழங்குவதற்கான நோக்கம்
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க அரசாங்கம் விரும்பினால், அதை மறுக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு தேவை என்று எந்தவொரு குழந்தையும் கூட உணரும் என மகிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், அந்தப் பாதுகாப்பை நீக்கி அதை மீண்டும் வழங்குவதற்கான நோக்கம் குறித்து தான் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மகிந்த – மைத்திரி கோரிக்கை
இவ்வாறானதொரு பின்னணியில், அண்மையில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனத்தை முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சவும் மைத்திரி பால சிறிசேனவும் மீளக் கோரியுள்ளனர்.
இந்நிலையில், அதற்கு பதில் அளித்துள்ள அரசாங்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் பாதுகாப்பு மீளாய்வுக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு குண்டு துளைக்காத வாகனம் மீள வழங்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
