Home இலங்கை சமூகம் மன்னார் இளம் தாய் சிந்துஜாவின் மரணம்: மூவருக்கு எதிராக நீதிமன்றம் விடுத்த உத்தரவு

மன்னார் இளம் தாய் சிந்துஜாவின் மரணம்: மூவருக்கு எதிராக நீதிமன்றம் விடுத்த உத்தரவு

0

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்வம் தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவரே இன்று(09) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் 28 உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

மருத்துவ பரிசோதனை

மருத்துவக் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கு காரணமாகவே குறித்த இளம் தாயின் மரணம் சம்பவித்துள்ளது என மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்தது.

இந்த நிலையில், கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக குறித்த ஐவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்படி, ஐவரில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும், இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றையதினம் சனிக்கிழமை(9) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

வழக்கு விசாரணை

அதன்போது மன்னார் நீதவான் குறித்த மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சந்தேக நபரான வைத்தியர் ஒருவரையும், தாதிய உத்தியோகத்தர் ஒருவரையும் கைது செய்ய உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version