Home இலங்கை சமூகம் இடை நிறுத்தப்பட்ட பாரத் – லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டம்

இடை நிறுத்தப்பட்ட பாரத் – லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டம்

0

இந்திய வீடமைப்புத் திட்டம் இடை நின்றமைக்கு, வீடுகள் கட்டப்பட வேண்டிய உரிய காணிகளை இலங்கை தரப்பு விடுவிக்காமையே காரணம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) கூறியதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganeshan) தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் பற்றி தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், “சந்தோஷ் ஜா, ‘ஆகஸ்ட் மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என்ற உறுதி மொழியுடன், சுமார் 375 மில்லியன் ரூபா செலவில், 1,300 வீடுகளை கட்டுவதற்காக, பாரத் – லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டம் என்ற பெயரில், கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

விசேட கலந்துரையாடல் 

இருப்பினும், இந்த நான்காம் கட்ட இந்திய வீடமைப்பு திட்டம் இடை நின்றமை அல்லது மிக பெரும் தாமதங்களை எதிர் கொண்டுள்ளமைக்கு, வீடுகள் கட்டப்பட வேண்டிய உரிய காணிகளை இலங்கை தரப்பு, இன்னமும் விடுவிக்காமையே காரணம். இந்த விவகாரத்தில், இந்திய தரப்பில் எவ்வித தாமதமும் இல்லை’ என்றார். 

இதன்போது, தமிழ் முற்போக்கு கூட்டணி பங்குபெறுகின்ற எமது அரசாங்கம் விரைவில் உருவாகும். கடந்த 2015 – 2019 நல்லாட்சியில் நடைபெற்றதை போன்று, தாமதங்களை களைந்து ஒட்டு மொத்த 10,000 வீடமைப்பு பணிகளையும் நாம் செய்து முடிப்போம் என நாம் இந்திய தூதர் சந்தோஷ் ஜாவிடம் உறுதி கூறினோம்.

மலையக பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை தொடர்பில் இன்று நிலவும் உதாசீன போக்கை நாம் முடிவுக்கு கொண்டு வருவோம்.

200 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய காலனி அரசு கட்டிய லயன் வீடுகளை கிராமங்கள் என்று சொல்ல முயலும் முயற்சியை, எமது காணி உரிமையை குழி தோண்டி புதைக்கும் செயற்பாடாக நாம் பார்ப்பதற்கு காணி உரிமை தொடர்பில் இன்றைய அரசின் உதாசீன போக்கே காரணம் எனவும் நாம் இந்திய தூதரிடம் எடுத்து கூறினோம்.

ஜனாதிபதிக்கு தெரிவிப்பு 

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, லயன் வீடுகள் கிராமங்கள் என்ற யோசனைக்கு, நாம் வழங்கிய ஆறு அம்ச மாற்று யோசனை ஆவணத்தையும் நாம் இந்திய தரப்புக்கு வழங்கினோம்.

நான்காம் கட்ட இந்திய வீடமைப்பு திட்டத்துக்கு மேலதிகமாக, இந்திய அரசு பின்வரும் உதவிகளை மலையக மக்களின் நலன் கருதி வழங்க உள்ளதாக எமக்கு இந்திய தூதர் சந்தோஷ் ஜா எடுத்து கூறினார்.

1. விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில் நுட்ப கல்வி, கணிதம் ஆகிய துறை சார் ஆசிரியர் பயிற்சி

2. மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள், பாடசாலை பைகள் வழங்கல்

3. தோட்ட தொழிலாளர் வீடுகளுக்கு சூரிய சக்தி மூலமான விளக்குகள்

4. ஸ்மார்ட் வகுப்பறைகள்

5. பாடசாலை பௌதிக கட்டுமானங்கள்

6. தொண்டமான தொழில் நுட்ப நிலையத்தை தரம் உயர்த்தும் உதவிகள்

இவை அனைத்தும் நமது மக்கள் நலன் கருதி இந்திய அரசால் வழங்கப்படும் உதவிகள்.

ஆகவே, இவற்றுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நன்றிகளை தெரிவித்து கொண்டு, அதேவேளை இவற்றை அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் பாரபட்சம் இன்றி அனைத்து மாவட்ட மக்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்யும் படி இந்திய அரசை நாம் கோரினோம்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version