மட்டக்களப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆறாம் மாதம் 21 ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த துப்பாக்கி சம்பவத்திற்கு ஊறணியை சேர்ந்த 35 வயதுடைய ம.பாலசுந்தரம் என்பவர் இலக்காகியிருந்தார்.
இதையடுத்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்திருந்தார்.
விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், மெய்பாதுகாவலர் ஒருவர் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்ததாகவும் அப்போதைய விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த காவல்துறை மெய்பாதுகாவலர் பிணையில் செல்ல இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தற்போதும் நடைபெற்று வருகின்றது.
காவல்துறை மெய்பாதுகாவலரால் ம.பாலசுந்தரம் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தநிலையில், இது தொடர்பாக அவரது நண்பரும் முச்சக்கரவண்டி சாரதியும் மற்றும் நேரடி சாட்சியமுமான விஜயராஜா என்பவர் விளக்கமளித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, நானும் பாலேந்திரனும் முச்சக்கரவண்டியில் வீதியால் சென்ற போது நான் யார் என தெரியுமா காவல்துறை என கூறிக்கொண்டு மெய்பாதுகாவலர் துப்பாக்கியை எடுத்ததும் துப்பாக்கி வெடித்தது எனது நண்பன் கீழே விழுந்தான்.
அத்தோடு, நானும் பாலசுந்தரமும் நண்பர்கள், சம்பவதினமான அன்று அமைச்சரின் வீடு அமைந்துள்ள வீதியிலுள்ள வீடு ஒன்றில் மண் கொடுப்பது தொடர்பாக பேசி விட்டு முச்சக்கரவண்டியில் சென்று திரும்பி வரும் போது அமைச்சரின் வீட்டின் முன்பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலுள்ள மரம் ஒன்றின் கீழ் குறித்த மெய்பாதுகாவலர் நின்றிருந்தார்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் குறித்த இளைஞர் உயிரிழந்திருந்த போதிலும் கொலைக்காக காரணம் கண்டறியப்படவில்லை என மரண விசாரணை அறிக்கைகள் வெளியாகியிருந்தன.
இது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தொடர் போராட்டங்கள் மற்றும் நீதி கோரி ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், கொலைச்சம்பவம் இடம்பெற்ற தினம் இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட பதிவு மற்றும் வீட்டு சிசிடிவி கேமரா இயங்காமல் இருந்தமை தொடர்பில் பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தது.
சர்ச்சையாக தொடர்ந்த இந்த சம்பவம் குறித்து சரியான நீதி கிடைக்காத உயிரிழந்த நபரின் உறவினர்கள் தற்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.
இந்தநிலையில், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தால் எப்படி தலையில் கம்பியால் தாக்கப்பட்டிருக்கும் ? கொலை நடந்த இடத்தை அவசர அவசரமாக எதற்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும் ? அத்தோடு கொலை சம்பவம் இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பில் இருந்தார் என்பதற்கான ஆதராம் உள்ளது” என அடுக்கடுக்காக கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
வெறும் வாய்வார்த்தைகளாக அல்லாமல் தகுந்த புகைப்பட ஆதாரங்களுடன் கருத்துக்களை முன்வைத்துள்ள உயிரிழந்தவரின் சகோதரி இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு அருகிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதனால் தமது அதிகாரத்தினைக் கொண்டு சாட்சியங்கள் மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படுகொலை சம்பவத்தில் உண்மையில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டதா, அதிகாரத்தில் இருந்த காரணத்தினால் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டதா என்பது தொடர்பில் பலதரப்பட்ட விமர்சனங்கள் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
இந்தநிலையில், படுகொலைச்சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களும் மற்றும் ஜனாதிபதியிடம் அவர் முன்வைத்துள்ள கருத்துக்களும் பின்வருமாறு,
https://www.youtube.com/embed/YhUMeVTICY4