இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பகுதி அதிகாரி மத்தீவ் கின்சன்
(Matthew Hinson) முல்லைத்தீவுக்கான (Mullaitivu) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி
அகழ்வு இடத்திற்கு இன்று (12.07.2024) பிற்பகல் நேரடியாக சென்று
பார்வையிட்டுள்ளார்.
அத்துடன் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த மற்றும்
பணிப்பாளர் ஜெ.தற்பரன் உள்ளிட்டவர்களும் குறித்த அகழ்வு பணி இடத்தினை
பார்வையிட சென்றுள்ளனர்.
அகழ்வாய்வு பணிகள்
இரு கட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின் படி குறித்த
மனித புதைகுழியில் இருந்து 40 மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும், தமிழீழ
விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்திய இலக்கத்தகடுகள்,
துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும்
மீட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த மனித புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி
ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக
நிறுத்தப்பட்டிருந்தன.
இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான
நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் கடந்த 04.07.2024ஆம் திகதி அன்று
ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக எட்டாவது நாளாகவும் இன்று
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மனித எச்சங்கள்
மூன்றாம் கட்ட அகழ்வு ஆய்வு பணியின் போது ஏழு மனித உடலங்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளதுடன் மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே
எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தமாக 43 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய அகழ்வு ஆய்வின் போது எலும்புக்
கூட்டுத்தொகுதிகளில் இருந்து த.வி.பு ஒ – 3035 இலக்கத்தகடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது
மேலும், துப்பாக்கி சன்னங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக
முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா நேற்று ஊடகங்களுக்கு
கருத்து தெரிவித்திருந்தார்.