Home இலங்கை அரசியல் சில பிரதேச சபை உறுப்பினர்களின் மோசமான செயற்பாடுகள்: அரசாங்கத்திற்கு அகௌரவம்

சில பிரதேச சபை உறுப்பினர்களின் மோசமான செயற்பாடுகள்: அரசாங்கத்திற்கு அகௌரவம்

0

ஆளும் கட்சி சில பிரதேச சபை உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு அகௌரவத்தையும்
இழிவான பெயரையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள் என மண்முனை மட்டக்களப்பு தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்
தெரிவித்துள்ளார்.

பிரதேச சபையில் நேற்று (20.11.2025) வியாழக்கிழமை மாலை
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது
அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது சபையிலே ஐந்து கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அங்கம்
வகிக்கின்றார்கள். இன்றைய தினம் எமது ஆறாவது கூட்டத்தொடர் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்ற நிலையில், எதிர்க்கட்சியில் இருக்கின்ற உறுப்பினர்கள் எமது
கூட்டத்தைக் குழப்பி எமது சட்ட திட்டங்களை குழப்புகின்ற வகையில் நடந்து
கொண்டார்கள்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 

பிரதேச சபை சட்டத்தின் அடிப்படையில் சுயேச்சைக் குழுவில் ஊசி
சின்னத்திலே எமது பிரதேச சபையிலே உறுப்பினராக இருக்கின்ற ஒரு உறுப்பினருக்கு
எதிராக அவர் ஒரு மாத காலத்திற்கு இந்த பிரதேச சபையில் நடைபெறுகின்ற
கூட்டத்திற்கு சமூகம் கொடுக்க முடியாது பிரேரணையைக் கொண்டு வந்திருந்தோம்.

அது
ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

அவருக்கு எதிராக கொண்டு வந்த பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அந்த வகையில் அவர் சபையில் இருந்து வெளியேறினார்.

அவர் வெளியேறியவேளை அவருடன்
சேர்ந்து ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து வெழிநடப்பு செய்து
சபை அமர்வை விட்டு வெளியேறினர். பின்னர் தொடர்ச்சியாக நாம் எமது சபை நடவடிக்கைகளை முன் கொண்டு பல தீர்மானங்களை
நிறைவேற்றி இருந்தோம்.

அந்த வகையில் இவ்வாறு சபை நடவடிக்கை முன்கொண்டு செல்கின்ற வேளையில்
உறுப்பினர்கள் யாராவது வெழிநடப்பு செய்தால், அல்லது வெளியேறினால் அவர்களுக்கு
உரிய கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என்ற தீர்மானத்தையும் நாம் இதன் போது
நிறைவேற்றி இருந்தோம். 

   

இதேவேளை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரின் தன்னிச்சையான
அடாவடித்தனங்கள் தொடர்ந்தால் மக்களை ஒன்றுதிரட்டி வீதிக்கு இறங்கப்போவதாக
குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் யோ.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று சபையின் நேற்றைய அமர்வின் போது, நடைபெற்ற  தவிசாளரின் நடவடிக்கைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும்,

தவிசாளரின் தன்னிச்சையான அடாவடித்தனங்கள் தொடர்ந்தால் மக்களுடன் வீதிக்கு
இறங்குவோம். வியாழக்கிழமை (20.11.2025) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச
சபையின் சபை அமர்வு இடம்பெற்றது. இதன்போது தவிசாளரினால் தனியார் கல்வி
நிலையங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பிரேரணை கொண்டுவரப்பட்டது.

எதிர்ப்பு அறிக்கை

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை நாம் கட்டுப்படுத்தும்போது எமது பிரதேச
மாணவர்களின் கல்வி அடைவு மட்டம் பாதிக்கப்படும் என்பதனை
தெளிவுபடுத்தியிருந்தோம். எமது கருத்துக்களை உள்வாங்காது பிரேரணையினை நிறைவேற்ற
முற்பட்டபோது உறுப்பினர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால்
வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. வாக்கெடுப்பின்போது நாம் எதிராக
வாக்களிக்கும்போது தவிசாளர் எம்மைப்பற்றி தவறான பொய்யான கருத்துக்களை கூறி
வீடியோ பதிவு செய்யப்பட்டது.

எம்மைப்பற்றி தவறாக பொய்யான கருத்து தெரிவித்து அதனை வீடியோ பதிவு செய்து
எமக்கு எதிரான செய்திகளை வெளியிட வேண்டாம் என நான் சுட்டிக்காட்டியதோடு ஏனைய
உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது உறுப்பினர் துவேனிகா ருக்மாங்கதன் தனது கருத்தினை தெரிவிக்க
முற்பட்டபோது என்ன வெளியில் அனுப்பவா என கடும் தொணியில் மிரட்டல் விட்டதோடு
பேசவிடாமல் தடுத்திருந்தார்.

உறுப்பினர் கி.வதனகுமார் தனது கருத்துக்களை தெரிவித்தபோது கருத்துக்களை
தெரிவிக்க இடம்கொடுக்காமல் தடுத்ததோடு தனது அதிகாரத்தை பாவித்து ஒரு
மாதத்திற்கு சபையிலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்ததுடன் வெளியேற்றுவதற்கான
பிரேரணையினையும் கொண்டு வந்தார்.

20 உறுப்பினர்களைக் கொண்ட சபையில்
இப்பிரேரணைக்கு எதிராக 10 வாக்குகளும் ஆதரவாக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதனால் தனது மேலதிக வாக்கினையும் தவிசாளர் பயன்படுத்தி தனது இரண்டு வாக்குகளால்
பிரேரணையினை நிறைவேற்றியிருந்தார்.

நாங்கள் 10 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறி உள்ளுராட்சி உதவி ஆணையாளர்
அலுவலகம் சென்று இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்திருக்கின்றோம்.

ஒவ்வொரு சபை அமர்வுகளிலும் உறுப்பினர்களை பேச விடாமல் தடுப்பதுடன் பேச
முற்படுகின்ற உறுப்பினர்களை வெளியேற்றுவேன் என்று மிரட்டும் தொணியில் பேசுவதும்
தொடர்ந்து இடம்பெறுவருகின்றன.

தவிசாளரின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பிலும் சபையினை தவறாகவும்,
சட்டத்திற்கு முரணாகவும் வழி நடாத்துவது தொடர்பிலும் சம்மந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு பல கடிதங்களை அனுப்பியிருக்ககின்றோம். இச்செயற்பாடுகள்
தொடர்பில் உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாம் மக்களின் கருத்துக்களை சபையில் கதைப்பதற்கு
இடம் வழங்கப்படாது தவிசாளரின் தன்னிச்சையான அடாவடித்தனமான செயற்பாடுகள்
தொடருமாக இருந்தால் மக்களை ஒன்று திரட்டி வீதிக்கு இறங்குவதைத் தவிர வேறு
வழியில்லை என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version