வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் 2026 ஆம் ஆண்டு தை மாதம் முதல் சபையின்
அனுமதி பெறாத நுண் நிதிக்கடன் நிறுவனங்கள் இயங்கவோ செயற்பாடுகளை முன்னெடுக்கவோ
முடியாதென வேலணை பிரதேச சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற சபை அமர்வின் போது நுண்கடன் பாதிப்பால் வேலணை மக்கள்
மத்தியில் ஏற்படும் அவலங்கள் குறித்து சுட்டிக்காட்டி, குறித்த நுண்கடனை
மக்களுக்கு திணிக்கும் நிறுவனங்களை சபையின் ஆளுகைக்குள் தடை செய்ய வேண்டும் என
கோரி சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தினால் முன்மொழிவொன்று
கொண்டுவரப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய சபையின் அமர்வின்போது குறித்த தீமானத்தின் செயற்படுத்துகை
தொடர்பில் ஆராயப்பட்டது.
அனுமதியற்ற அதிக வரிஅறவீடு
இதன்போது உரையாற்றிய தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் பிரதேச சபையின்
உறுப்பினருமான சுவாமிநாதன் பிரகலாதன், அனுமதியற்ற அதிக வரிஅறவீடு செய்யும்
நுண்கடன் நிறுவனங்கள் தடை செய்யப்பட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என
வலியுறுத்தினார்.
அத்துடன் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் 37 இற்கும் அதிகமான நுண் நிதி நிறுவனங்கள்
கடன் வசதி கொடுப்பது என்ற போர்வையில் மக்களின் உழைப்பை சூறையாடிவருகின்றன.
ஆனால் 2 நிறுவனங்களே சபையின் அனுமதியுடன் சட்டரீதியாக மத்திய வங்கியின்
கட்டுப்பாடுகளுக்கிணங்கஇயங்குகின்றன.
ஏனையவை சட்டவிரோதமான முறையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.
வேறிடங்களில் இருந்து முகவர்களை அனுப்பி செயற்பாடு
இதிலும் பல வேலணையில் தமக்கன அலுவலகங்கள் கூட இல்லாது, வேறிடங்களில் இருந்து
முகவர்களை அனுப்பி செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.
இத்தகைய நிறுவனங்கள் பல மத்திய வங்கியின் வரையறையையும் மீறி 30 – 40 வீதங்கள்
வட்டியாக அறவீடுகளை செய்கின்றன. அத்துடன் மாதத் தவணைகளை மீள் அறவீடு செய்யும்
முறையும் மிகத் கீழ்த்தரமாக உள்ளது.
இதனால் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்த ஆண்டின் ஆரம்பம் முதல்
நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக சபையின் கட்டுப்பாடுகளை ஏற்று ஏனைய நுண் நிதி நிறுவனங்களும்
செயற்படுமானால் அவற்றுக்கு மிகுந்த கண்காணிப்புடன் அனுமதி வழங்க முடியும்.
இல்லையேல் அவை அனைத்தும் சபையின் ஆளுகைக்குள் நுழைய முற்றாக தடை செய்ய
வேண்டும் எனவும் இதற்கு சபை உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்
வலியுறுத்தினார்.
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் தடை
குறித்த விடையம் தொடர்பில் தவிசாளர் சி.அசோக்குமார் கூறுகையில் ,ஏற்கனவே எமது
உறுப்பினர் ஒருவரால் கொண்டுவரபட்ட இந்த விடையம் தற்போது செயற்படுத்துவதற்கான
சட்டரீதியான செயற்பாட்டை நோக்கி முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக இவ்வாறு எமது ஆளுகைக்குள் இயங்கும் குறித்த நிறுவனங்களை இவ்வாரம்
அழைத்தோ அல்லது தொலைபேசியிலோ பேச்சுக்களை நடத்த இருப்பதாக
குறிப்பிட்டதுடன் இதன்போது சபையின் வரையறைகளை ஏற்காத நிறுவனங்கள் அனைத்தும்
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் செயற்படுவதை அடுத்த ஆண்டுமுதல் தடை செய்ய
சகல ஏற்பாடும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
