கிளிநொச்சியில் (Kilinochchi) முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரட்டப்படும் நிதியில் முறைகேடு
இடம்பெற்றுள்ளதாக தன்னார்வ அமைப்பொன்றின் உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி சோலைவனம் விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
ஒன்றின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து வெளியிடும் போதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
பயனாளிகள்
யுத்த காலத்திலும், அதன் பின்னரான காலப்பகுதியிலும் முள்ளந்தண்டுவடம்
பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், வவுனியா சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த அமைப்பு, முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியை தலைமையாகக்
கொண்டு இயங்கி வருகிறது
குறித்த அமைப்பிற்கு பெரும் தொகை நிதி உதவிகள் கிடைப்பதாகவும், அவை உரிய
முறையில் பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
ஒப்பந்த நடவடிக்கைகள்
பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியைவிட, ஊழியர்களுக்கு அதிக நிதி
செலவு செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுவதுடன், குறிப்பிட்ட காலத்திற்குள் 4
கோடிக்கு அதிக நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டது
வருமானம் ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பண்ணை வளர்ப்பில் ஆடு கொள்வனவு
செய்யப்பட்டதிலும் ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
அத்துடன், குறித்த அமைப்பின் தலைவர் ஒரு தொகை நிதியை தனது தனிப்பட்ட வங்கி
கணக்குக்கு வைப்பு செய்துள்ளமை தொடர்பிலும் தகவல் வெளியிடப்பட்டது.
மேலும், வாகன கொள்வனவு மற்றும் ஒப்பந்த நடவடிக்கைகளிலும் முறைகேடுகள்
இடம்பெற்றுள்ளதாகவும் இன்றைய ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட பயனாளிகளால்
குற்றம் சுமத்தப்பட்டது.