தங்காலை அருகே மித்தெனிய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜுன் மாதம் 24ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் தேக்கவத்தை வீதியில் உள்ள விவசாயப் பண்ணையொன்றில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தங்காலை குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
கைது
இந்நிலையில் பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்றைய தினம்(8) இரண்டு சந்தேக நபர்கள் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் இரண்டு பேரும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 25 வயது வாலிபர்கள் என்று தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணை
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் மேற்குறித்த கொலைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மினி ஊஷி ரக துப்பாக்கியொன்று, 09 மி..மி. கைதுப்பாக்கியொன்று, 09 மி..மி. கைதுப்பாக்கிக்கான 53 தோட்டாக்கள், ரிபீட்டர் துப்பாக்கிக்கான 25 தோட்டாக்கள், டீ56 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 19, டீ56 ரக துப்பாக்கிக்கான தோட்டா வெற்று உறைகள் 02, கைவிலங்குகள் இரண்டு, 300 கிராம்,120 மில்லிகிராம் எடைகொண்ட ஹெரோயின் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இது தொடர்பில் தங்காலைக் குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
