பேரிடர் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை மீட்டெடுக்கும் உதவித்
திட்டத்தின் முதல்கட்டமாக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 13
ஆயிரத்து 500 கோடி ரூபா) மறுசீரமைப்பு தொகுப்பை இலங்கைக்கு வழங்க
முன்வந்துள்ளது.
இந்தியப் பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக நேற்று இலங்கைக்கு வந்த இந்திய
வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இன்று காலை ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தார்.
அப்போது இந்தச் சிறப்பு உதவி பற்றிய
திட்டம் குறித்த விவரங்களை இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமரின் விசேட
தூதுவர் தெரிவித்தார்.
350 மில்லியன்
இந்த 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகுப்பில் 350 மில்லியன் அமெரிக்க
டொலர் சலுகைக் கடன் வசதிகளைக் கொண்டது. மிகுதி 100 மில்லியன் அமெரிக்க டொலரும்
மானியங்களாக வழங்கப்படும்.
இந்தத் தொகுப்பு இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான ஆலோசனைகளின் பின்னர் இறுதி
செய்யப்படுகின்றது என்று தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி
சுப்பிரமணியம் ஜெய்சங்கர், பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவி வழங்க இந்தியா
முன்னுரிமை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இந்தியப்
பிரதமர் நரேந்திர மோடியால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதத்தையும்
கையளித்தார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் நிவாரணம் மற்றும்
புனர்வாழ்வு முயற்சிகளுக்கும், இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும்
இந்தியப் பிரதமரும் இந்திய அரசாங்கமும் அளித்த மனப்பூர்வமான ஆதரவை ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க நன்றியுடன் பாராட்டினார்.
மீட்புப் பணிகளுக்கு ஹெலிகள், மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட
மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும், சேதமடைந்த வீதிகளை மீளமைப்பதிலும்,
மகியங்கனை வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலை கட்டமைப்பை மறுசீரமைப்பதிலும்
இந்திய அரசாங்கம் அளித்த விசேட ஆதரவையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு
கூர்ந்தார்.
புதிய அத்தியாயம்
ஒவ்வொரு கடினமான சமயத்திலும் இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான
ஆதரவை ஜனாதிபதி ஞாபகமூட்டியதோடு பேரழிவுக்குப் பிறகு இலங்கையின் மீளமைப்பு
செயற்பாட்டுக்கு வழங்கும் ஒத்துழைப்பு இந்திய – இலங்கை உறவுகளில் ஒரு புதிய
அத்தியாயத்தைக் குறிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கடினமான சமயத்தில் இலங்கையுடன் பலமாக இணைந்திருக்கவும், இலங்கையை
மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளை வழங்கவும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அறிவுறுத்தியதாகவும், அந்த முயற்சிகளை
ஆராய்வதற்காக இந்தியப் பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாக இலங்கைக்குத் தான்
விஜயம் மேற்கொண்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும்
இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான
இருதரப்பு பேச்சுகள் ஆரம்பமானதோடு , இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை
மேலும் விரிவுபடுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக இலங்கையின்
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்று
இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கைக்கு இந்தியா வழங்கிய சலுகைப் பொதியை அடையாளப்படுத்தும் வகையில்
கிளிநொச்சி ஏ – 35 வீதியில் உள்ள பேல் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வு,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய மற்றும் இலங்கை வெளிவிவகார
அமைச்சர்களின் பங்கேற்புடன் ஒன்லைனின் ஊடாக நடைபெற்றது.
ஜனாதிபதிக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான பேச்சுகளில்
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான
அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா
ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இந்திய
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக
செயலாளர் புனித் அக்ரவால், இந்தியப் பிரதித் தூதுவர் சத்யஞ்சல் பாண்டே மற்றும்
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்
குமாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக
செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித
ஹேரத்துடனும் விரிவான பேச்சுக்களிலும் ஈடுபட்டார்.
