Home இலங்கை சமூகம் ருமேனியாவில் வேலைவாய்ப்பு: பாரிய பண மோசடியில் சிக்கிய பலர்

ருமேனியாவில் வேலைவாய்ப்பு: பாரிய பண மோசடியில் சிக்கிய பலர்

0

ருமேனியாவில் (Romania) வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மாத்தறை (Matara), கொட கமவில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ருமேனியாவில் தொழில் வழங்குவதாக பணம் வசூலித்ததாகவும், அந்த வேலை வாய்ப்புகளை வழங்கவில்லை எனவும் பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மோசடி தொகை

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி, குறித்த சந்தேகநபரால் சுமார் 130 இலட்சம் ரூபாவுக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேகத்திற்குரிய நிறுவனத்தின் வேலைவாய்ப்பு உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் பெப்ரவரி 29 அன்று முடிவடைந்துள்ளதுடன், உரிமம் புதுப்பிக்கப்படாமல் நிறுவனம் சட்டவிரோதமாக இயக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

இதன்படி, முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக குறித்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் நேற்று (13) பணியகத்திற்கு அழைக்கப்பட்டு பணியக சட்டத்தில் உள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய நீதவான், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், பயணத்தடையும் விதித்துள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version