வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, வயதான பெண்களை சுற்றுலா விசாவில் துபாய்க்கு அனுப்பிய 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) சிறப்பு புலனாய்வுப் பிரிவினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள்
கோட்டை – பத்தேகன வீதியில் மெத்சர வீட்டுப் பணிப்பெண் சேவைகள் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த சந்தேக நபர், துபாயில் வீட்டு உதவியாளர் வேலைகளை வழங்குவதாக உறுதியளித்து 58 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களிடம் பணம் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலா விசாவில் துபாய்க்கு அனுப்பப்பட்ட ஒரு பெண் வேலைவாய்ப்பைப் பெறத் தவறியதால் திரும்பி வந்ததாக மற்றொரு முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சந்தேக நபருக்கு பணம் கொடுத்ததாகவும், ஆனால் ஒருபோதும் வேலை வழங்கப்படவில்லை என்றும் இன்னுமொரு முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்
இதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் கிட்டத்தட்ட 1.1 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட் நிறுவனத்தை ஆராய்ந்த அதிகாரிகள், கொடுக்கப்பட்ட முகவரியில் அத்தகைய நிறுவனம் எதுவும் இல்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபர் கைது செய்யப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நான்கு கடவுச்சீட்டுகள், பயோமெட்ரிக் அடையாள அட்டைகள் மற்றும் விசா தொடர்பான பல ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
